Published : 01 Nov 2022 01:50 PM
Last Updated : 01 Nov 2022 01:50 PM

“ஈஸ்வரன் கோயிலில் உட்கார்ந்து கந்த சஷ்டி கவசம்...” - அண்ணாமலையை கிண்டல் செய்த செந்தில்பாலாஜி 

கோவையில் நடந்த சபா மற்றும் வார்டு கமிட்டிக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி

கோவை: "பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விகளை விட்டுவிடுங்கள், நாட்டு மக்களுக்கான கேள்விகள் இருந்தால் கேளுங்கள்" என்று செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள் விடுத்தார் .

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண் 62-ல் இன்று நடைபெற்ற பகுதி சபா மற்றும் வார்டு கமிட்டி கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வடகிழக்குப் பருவமழையையொட்டி மின் வாரியத்தின் சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார்.

அப்போது அவரிடம், பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "தயவுசெய்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விகளை தவிர்க்க வேண்டும். அதாவது, உலகத்திலேயே பெரிய கரகாட்ட கோஷ்டி எது என்ற காமெடியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதாவது ஈஸ்வரன் கோயிலில் உட்கார்ந்து கந்த சஷ்டி கவசம் படித்தவர்களை, உலகத்தில் நீங்கள் இங்குதான் பார்த்திருப்பீர்கள்.

அந்தக் கோயில் கோட்டை ஈஸ்வரன் கோயில், அங்கு அமர்ந்து கந்த சஷ்டி கவசம் படித்ததாக செய்திகள் வந்தன, தொலைக்காட்சியிலும் காண்பித்தார்கள். இதைவிட கோமாளித்தனம் வேறு எதுவும் இருக்காது. எனவே, அதுபோன்ற கருத்துகளைக் கூறும் அண்ணாமலை குறித்த கேள்விகளை தவிர்த்திட வேண்டும்.

நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களைப் பார்த்து நீங்கள் வேண்டுமென்றால், என்னுடைய செய்தியாளர் சந்திப்பை புறக்கணியுங்கள், தவிர்த்துவிடுங்கள் என்று கூறுகிறார். அதன்பிறகும், அவர் குறித்த கேள்விகளை முன்வைக்கிறீர்களே? எனவே அவர் குறித்த கேள்விகளை விட்டுவிடுங்கள், நாட்டு மக்களுக்கான கேள்விகள் இருந்தால் கேளுங்கள்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x