Published : 01 Nov 2022 10:46 AM
Last Updated : 01 Nov 2022 10:46 AM
சென்னை: சென்னை உட்பட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை உள்பட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை தொடரும்.
இதேபோல், நீலகிரி, கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கரூர், ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு தொடர்ந்து மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கொட்டித்தீர்க்கும் கனமழை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் நேற்று இரவுமுதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எழும்பூர் தமிழ் சாலை, நுங்கம்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, பாரிமுனை, வடபழனி, மயிலாப்பூர் முசிறி சுப்ரமணியன் சாலை, கோயம்பேடு உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரில் வாகனங்களை இயக்க முடியாமல், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதால், மழைநீர் செல்வதற்கு வழியின்றி சாலைகளில் தேங்கி கிடக்கிறது. இதனால் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்கிறது. ஒருசில இடங்களில், மழைநீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால், சீரமைப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில், கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழையும் எனவும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர்களில் நேற்று (அக்.31) மாலையில் தொடங்கி கனமழை பெய்து வந்தது. இரவுநேரத்தில் தொடர்ந்து கனமழை விடாது பெய்தது. கனமழையின் காரணமாக சாலையின் ஆங்காங்கே நீர் தேங்கியிருப்பதால் நடந்து பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்நிலையில், இன்று (நவ.1) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்ததை அடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT