Published : 26 Nov 2016 09:50 AM
Last Updated : 26 Nov 2016 09:50 AM
உடல் தானம் செய்வதில் பொது மக்களிடம் ஆர்வம் இல்லாததால் தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவ மாணவர்களின் கூறாய்வு செயல்முறைக்கு அடையாளம் தெரியாத உடல்களையே நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நவீன மருத்துவத்தின் வளர்ச்சியில் ரத்த தானம், கண் தானம் மட்டுமே பிரதானமாக இருக்கிறது. தானங்கள் பட்டியலில் உடல் உறுப்பு தானம் சிறப்பு வாய்ந்தது. ஆனால், உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப் புணர்வு இன்னும் நடுத்தர, அடித் தட்டு மக்களைச் சென்றடைய வில்லை. அதனால், உடல் உறுப்பு தானம் வழங்குவது அபூர்வ நிகழ்வாகி வருகின்றன.
தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. இக்கல்லூரிகளில் 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களை, தர மான மருத்துவர்களாக உருவாக்கு வதற்கு மனித உடல் கூறாய்வு செயல்முறை, பயிற்சி மிகவும் அவசியமானது. அதனால், மருத் துவ மாணவர்களின் இந்த மனித உடல் கூறாய்வு செயல்முறைக்கு இறந்த மனித உடல்களின் தேவை அதிகம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அரசு சுகாதாரத் துறையினர் பொதுமக்களிடம் உடல் தானங்களை எதிர்பார்க்கின்றனர். ஆனால், உடல் தானம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டாததால், அடையாளம் தெரியாத உடல்களை நம்பியே மருத்துவக் கல்லூரிகளில் மனித உடல் கூறாய்வு செயல்முறை நடக்கிறது.
சேலம் முதலிடம்
இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்தராஜ், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்ற தகவல்களைக்கொண்டு கூறும்போது, “உடல் தானத்தில் கடந்த 2001 முதல் 2015-ம் ஆண்டு வரை 15 ஆண்டுகளில் தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைகளில் சேலம் அரசு மருத் துவக் கல்லூரியில் அதிகமானவர் கள் உடல் தானம் செய்துள்ளனர். இங்கு 93 ஆண்கள், 60 பெண்கள் உடல் தானம் கொடுத்ததால் தமிழக அளவில் முதல் இடத்தை சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக மதுரை அரசு மருத்துவமனையில் 119 பேர் உடல் தானம் அளித்துள்ளனர். இதில் 86 ஆண்கள், 33 பெண்கள் உடல் தானம் அளித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் 85 பேர் உடல் தானம் செய்துள்ளனர். மற்ற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இதைவிட குறைவாகவே உடல் தானம் நடக்கிறது.
உடல் தானம் பற்றி தாமாகவே விழிப்புணர்வு பெற்று தகவல் தெரிந்து தானம் கொடுக்க முன்வருபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பலர் தானம் கொடுக்க முன்வரும் மனநிலையில் இருந்தாலும் அவர்கள் எவ்வாறு கொடுப்பது, யாரை அணுகுவது போன்ற கேள்விகளோடு முடங்கி விடுகின்றனர்.
அரசு சுகாதாரத் துறையும் இதற்கென்று பிரத்யேக மாக விழிப்புணர்வு தகவல்களை அளிக்கவும் பொதுமக்களிடம் இத்திட்டம் பற்றிய தகவல்களை முழுமையாக கொண்டுசெல்லவும் தவறிவிட்டது” என்றார்.
உடல் தானம் வழங்குவது எப்படி?
உடல்தானம் யார் வேண்டுமானாலும் அவர்களது இறப்புக்குப் பிறகு வழங்கலாம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே உடல் தானம் பெறப்படுகிறது. உடல் தானம் செய்ய விரும்புகிறவர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதற்கான விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து, வாரிசுதாரர்களின் ஒப்புதல், முகவரி சான்று ஆகியவற்றை இணைத்து வழங்க வேண்டும். அதற்கான ஒப்புகை சீட்டை மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு வழங்கும். உடல் தானம் செய்தவர் இறக்க நேரிட்டால் இறப்புக்குப் பிறகு அவரது உடல் மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவர்களின் உடற்கூறாய்வுக்கு பயன்படுத்தப்படுகிறது.
எந்த சிக்கலும் இல்லை
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் எம்.ஆர்.வைரமுத்துராஜூ கூறும்போது, “அடையாளம் தெரியாத உடல்களை யாரும் உரிமை கேட்டு வராதபட்சத்தில் அந்த உடல்களை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மனித உடல் கூறாய்வு செயல்முறைக்கு பயன்படுத்துவோம். அதனால், மருத்துவக் கல்லூரிகளில் மனித உடல் கூறாய்வு செய்முறைக்கு எந்த சிக்கலும் இல்லாமல் நடக்கிறது. உடல் தானத்தை ஊக்குவிக்கவும் விழிப்புணர்வு நடவடிக்கைக்காகவும், அதற்காக தனி ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT