Published : 01 Nov 2022 04:30 AM
Last Updated : 01 Nov 2022 04:30 AM

156-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மன்னார்குடி நகராட்சி: பாரம்பரிய கட்டமைப்புகளை மீட்கும் பணி தீவிரம்

மன்னார்குடி மேல முதல் தெருவில் சிறிய பாலத்தில் இருந்த அடைப்புகள் சுத்தம் செய்யப்படுவதை பார்வையிடுகிறார் நகர்மன்றத் தலைவர் த.சோழராஜன்.

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி உருவாக்கப்பட்டு 155 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று(நவ.1) 156-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் 1-11-1866-ல் மன்னார்குடி நகராட்சி அந்தஸ்தை பெற்றது. அப்போது 16 வார்டுகளும், 19,447 மக்கள் தொகையும் கொண்டதாக மன்னார்குடி இருந்தது. காலமாற்றத்தில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து 33 வார்டுகளாக நகராட்சி விரிவடைந்தாலும், தொடக்க காலத்தில் இருந்த பல்வேறு கட்டமைப்புகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன.

தற்போது அவற்றை புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், வடுவூர்- மன்னார்குடி இடையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நகராட்சிக்குச் சொந்தமான 75 ஏக்கரில், இதுவரை 6 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தூய்மைப்படுத்தப்படாமல் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த நாராச சந்துகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வாரும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. நகரில் 93 குளங்கள் இணைக்கப்பட்டு அவற்றுக்கு புது ஆற்றுப் பாசனத்தின் மூலம் நீர் நிரப்பப்பட்டு வந்தது. அந்த நீர்வழிப் பாதைகள் அடைபட்டிருந்த நிலையில், கடந்த 5 மாதங்களில் 11 கி.மீ தொலைவுக்கு தூர் வாரி மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நேசக்கரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் என்.ராஜப்பா கூறியது: நகரில் பாரம்பரியங்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதும், வீடற்றவர்களுக்கு ரூ.70 லட்சம் மதிப்பில் ஆதரவற்றோர் இல்லம் கட்டப்படுவதும் மகிழ்ச்சியளிக்கிறது. இதை ஊக்கப்படுத்தும் விதமாக மன்னார்குடி நகராட்சிக்கு தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்றார்.

மன்னார்குடி நகராட்சித் தலைவர் சோழராஜன் கூறியதாவது: நகராட்சியின் மூலம் 43 தெருக்களில் மண் சாலைகள், பேவர் பிளாக் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. தினமும் 15 டன் குப்பை உரமாக்கப்பட்டு கிலோ ரூ.2.50-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் மன்னார்குடி நகரம் முழுமையான தூய்மை என்ற இலக்கை அடைய வாய்ப்புகள் உள்ளன.

இதுதவிர எம்எல்ஏ டிஆர்பி.ராஜாவின் முயற்சியால் ரூ.26.76 கோடியில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் கட்டவும், ரூ.120 கோடியில் புதை சாக்கடை திட்டம், டிஜிட்டல் நூலகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, மன்னார்குடி நகராட்சி 156-வது ஆண்டு பயணத்தில் மிகச் சிறப்பான வளர்ச்சியை பெறும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x