Published : 31 Oct 2022 09:10 PM
Last Updated : 31 Oct 2022 09:10 PM

38 சென்சார்கள், 68 சிசிடிவி கேமராக்கள்... - சென்னை வெள்ளத்தைக் கண்காணிக்க தயார் நிலையில் கட்டுப்பாட்டு அறை

பேரிடர் கட்டுப்பாட்டு அறை

சென்னை: சென்னையில் பல்வேறு பாதிப்புகளை கண்டறிய ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரம் :

கட்டுப்பாட்டு அறை : பருவமழையை முன்னிட்டு மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் 24 மணிநேரமும் பணிபுரிய சுழற்சி முறையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் 4 அலுவலர்கள், துணை ஆட்சியர் நிலையில் 3 அலுவலர்கள், 3 செயற்பொறியாளர்கள் மற்றும் 54 இதர நிலையிலான அலுவலர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதர சேவைத் துறைகளான சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீகரற்று வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் நீர்வளத்துறை ஆகிய துறைகளைச் சார்ந்த புகார்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய துறைகளின் அலுவலர்களும் கட்டுப்பாட்டு அறையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புகார் மற்றும் உதவி எண்கள்: பருவமழைக் காலங்களில் பொதுமக்கள் புகார்களைத் தெரிவிக்க 10 இணைப்புகளுடன் கூடிய 1913 உதவி எண்ணும், 044-2561 9206. 044-2561 9207 மற்றும் 044-2561 9208 ஆகிய தொலைபேசி எண்களும், 94454 77205 என்ற வாட்ஸ்ஆப் செயலியும் இந்தக் கட்டுப்பாட்டு அறையில் செயல்பட்டு வருகிறது.

கண்காணிப்பு கேமராக்கள்: சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகள், நீர்வழிக் கால்வாய்கள், ஏரிகள் மற்றும் கடல் முகத்துவாரங்களில் பொருத்தப்பட்டுள்ள 68 கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை இந்தக் கட்டுப்பாட்டு அறையிலுள்ள திரையின் மூலம் கண்காணிக்கலாம்.

வெள்ள சென்சார்கள் (Flood Sensors): பருவமழைக் காலங்களில் சுரங்கப்பாதைகள் மற்றும் நீர்வழிக் கால்வாய்களில் செல்லும் வெள்ள நீரின் அளவினை அறிய 38 இடங்களில் வெள்ள உணரிகள் (Flood Sensors) அமைக்கப்பட்டு அதன் விவரங்கள் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்படுகிறது. இதன் மூலம் ஏதேனும் ஒரு பகுதியில் (அ) ஏதேனும் ஒரு இடத்தில் வெள்ளப் பாதிப்பு அதிகமாக இருப்பின் உடனடியாக தொடர்புடைய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உடனடியாக பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள முடியும்.

மழைமானி (Rain Gauge): சென்னையில் பொழியும் மழையின் அளவினை கண்டறிய மாநகராட்சியின் சார்பில் ஒரு மண்டலத்திற்கு 2 என 15 மண்டலங்களில் 30 மழைமானிகள் (Rain Gauge) பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தந்தப் பகுதிகளில் பொழிகின்ற மழையின் அளவினை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.

இந்தக் கட்டுப்பாட்டு அறையில் பருவமழையின் காரணமாக ஏற்படும் மழைநீர் தேக்கம், சாய்ந்த மரங்கள் மற்றும் மரக்கிளைகள் எரியாத தெருவிளக்கு மின்கம்பங்கள், மின்சாரப் பெட்டிகள் மற்றும் மின்கம்பங்களில் ஏற்படும் மின்கசிவு, மின் இணைப்பு துண்டிப்பு, குடிநீர் விநியோகம், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருதல், சாலை மற்றும் தெருக்களில் வெளியேறும் கழிவுநீர் குறித்து பெறப்படும் புகார்கள் தொடர்பாக தொடர்புடைய அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தப் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், 10 இணைப்புகளுடன் செயல்பட்டு வரும் 1913 உதவி எண்ணில், கூடுதலாக 10 இணைப்புகளை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x