Last Updated : 31 Oct, 2022 07:42 PM

4  

Published : 31 Oct 2022 07:42 PM
Last Updated : 31 Oct 2022 07:42 PM

புதுச்சேரி | “தண்டனை காலம் முடிந்தது... எங்களை விடுதலை செய்யுங்கள்” - ஆளுநர் காலில் விழுந்து கோரிய 27 கைதிகள்

புதுச்சேரி: காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனை முடிந்த கைதிகள், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையின் காலில் விழுந்து, தங்களை விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் கைதிகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறை துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. யோகா, தியான வகுப்புகள் நடைபெறுகிறது. அதோடு ஒவியம், சிற்பம் உள்ளிட்ட நுண்கலைப் பயிற்சியும், உடல் நலனை பாதுகாக்க பயிற்சியாளர்கள் மூலம் விளையாட்டு பயிற்சியும், நடன பயிற்சியும் அளிக்கப்படுகிறது. சிறை வளாகத்தில் அமைந்துள்ள 36 ஏக்கரில் 5 ஏக்கர் நிலப்பரப்பு கைதிகளால் சமன்படுத்தப்பட்டு துல்லிய பண்ணை மற்றும் இயற்கை விவசாய பண்ணை உள்ளிட்வை அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்துகொண்டு வரப்பட்ட 60 வகையான பழம், மூலிகை, காய்கறி என 50 ஆயிரம் செடிகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சிறைச்சாலை வளாகத்தின் ஒரு பகுதியில் 147 வகையான மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகள் அடங்கிய சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு மூலிகை தோட்டத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கைதிகளால் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த பண்ணை, திராட்சைத் தோட்டத்தை பார்வையிட்டு கைதிகளை வெகுவாக பாராட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: ''சுதந்திர போராட்ட காலங்களில் சிறையில் வதைபட்டு கிடந்தார்கள். இன்று விதைபோட்டு வளர்க்கின்றனர். இதை பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இங்கு 5 ஏக்கரில் பல்வேறு வகையான செடிகள், பழ வகைகளை வளர்த்து வருகின்றனர். இதனை வளர்க்கும் போது மனநிறைவு தரும் சைக்காலஜி ட்ரீட்மென்ட் ஆகவும் இது இருக்கும். இதற்காக கைதிகளுக்கு எனது பாராட்டுக்களை தெரிவிக்கிறேன். இன்னும் இது விரிவடைய வேண்டும். என்றும் அவர்களின் முயற்சிக்கு எனது ஆதரவு இருக்கும்.

தண்டனைக் காலம் முடிந்த கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். வெளிப்படையாக சொல்ல முடியாது. யாராக இருந்தாலும் நியாயப்படி எந்த கோரிக்கை இருந்தாலும் அது பரிசீலிக்கப்படும். புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் இங்கு முதல்வர் தேசியக்கொடி ஏற்றுகிறார். டெல்லியில் போர் நினைவு சின்னத்தில் நான் மரியாதை செலுத்துகிறேன். இதற்காக நாளை(இன்று) டெல்லி செல்கிறேன். மேலும் அங்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளேன். மக்களுக்கு வேண்டிய அத்தனை உதவிகளையும் விரைவாக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

தொடர்ந்து மத்திய அரசு, புதுச்சேரிக்கு பல உதவிகளை செய்து வருகிறது. ரூ.1,400 கோடி உதவி கிடைக்க இருக்கிறது. 700 ஏக்கர் மத்திய அரசிடம் இருந்து, புதுச்சேரிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அதனால் புதுச்சேரியில் இன்னும் சுற்றுலா உள்ளிட்டவை விரிவுபடுத்தப்படும். மருத்துவ மற்றும் சட்ட பல்கலைக்கழகம், சட்டப்பேரவை ஆகியவற்றை புதுமையாக ஏற்படுத்துவதற்காக அத்தனை முயற்சிகளுக்கும் மத்திய அரசு துணை நிற்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆதலால் புதுச்சேரி மிகப்பிரமாண்டமான வளர்ச்சியை பார்க்கும். புதுச்சேரியில் எதிர்கட்சிகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர்.

எதிர்கட்சிகள் சொல்லும் விமர்சனங்களை ஆலோசனையாகத்தான் நான் எடுத்துக்கொள்வேன். அவர்களின் குற்றச்சாட்டு பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு சரி செய்யப்படும். ஆதலால் ஆலோசனையாக சொல்லுங்கள், விமர்சனமாகவே சொல்லிக்கொண்டு இருக்க வேண்டாம். புதுச்சேரி போக்குவரத்து துறையில் பல திட்டங்கள் இருக்கின்றன. அது தொடர்பாக துறை அமைச்சருடன் ஆலோசனை செய்து அதில் உள்ள குறைகள் தீர்க்கப்படும்'' என்று தெரிவித்தார்.

ஆளுநர் காலில் விழுந்து கண்கலங்கிய கைதிகள்: விழா முடிந்து ஆளுநர் சிறைசாலையில் இருந்து புறப்பட்ட வந்தார். அப்போது தண்டனை காலம் முடிந்த 27 கைதிகள் தங்களை விடுவிக்க வேண்டி முறையிட்டனர். எங்களது குடும்ப நலனை கருத்தில்கொண்டு கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று முறையிட்டனர். சில கைதிகள் மண்டியிட்டும், ஆளுரின் காலில் விழுந்து விழுத்தும் கண்கலங்கினர். இதையடுத்து “பார்க்கிறேன்'' என்று பதில் கூறிவிட்டு ஆளுநர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x