Published : 31 Oct 2022 03:34 PM
Last Updated : 31 Oct 2022 03:34 PM
சென்னை: மருத்துவத் துறையும், சமூக நலத் துறையும் சேர்க்காவிடில் தமிழக காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைக்கப்பட்டதின் நோக்கம் முழுமையாக நிறைவேறாது என்று சூழலியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவை தமிழக அரசு அமைத்தது. தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்துக்கு கொள்கை வழிகாட்டுதலை வழங்க, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தணிப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்க, தமிழ்நாடு மாநில காலநிலை மாற்ற செயல்திட்டத்தை உருவாக்குவதற்கான உரிய வழிகாட்டுதல்களை வழங்க இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்து இருந்தது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தக் குழுவில் பொருளாதார நிபுணர் மான்டேக் சிங் அலுவாலியா, இன்ஃபோசிஸ் நிறுவனர் மற்றும் தலைவர் நந்தன் எம்.நிலேகனி, ஐ.நா. சபை முன்னாள் துணை பொதுச் செயலர் எரிக் எஸ்.சோல்ஹிம், நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மைய நிறுவனர் மற்றும் இயக்குநர் ரமேஷ் ராமச்சந்திரன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுந்தர்ராஜன், ராம்கோ சமூக சேவைகளின் தலைவர் நிர்மலா ராஜாஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும், தலைமைச் செயலர், மாநில திட்டக்குழு துணைத் தலைவர், தொழில், நகராட்சி நிர்வாகம், நிதி, எரிசக்தி, ஊரக வளர்ச்சி, வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி, கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம், மீனவர் நலம், வேளாண்மை மற்றும் உழவர் நலம் ஆகிய துறைகளின் செயலர்கள் குழு உறுப்பினர்களாக உள்ளனர்.
ஆனால் காலநிலை மாற்றத்தால் அதிக அளவு பாதிப்பு எதிர்கொள்ளக் கூடிய மருத்துவத் துறை மற்றும் சமூக நலத் துறை ஆகிய இரண்டு துறைகளை தமிழக அரசு இந்தக் குழுவில் சேர்க்காமல் உள்ளது. காலநிலை மாற்றத்தால் மருத்துவத் துறை அதிக அளவு பாதிப்பைச் சந்திக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து கூறி வருகிறது. காலநிலை மாற்ற பாதிப்புகளால் ஆண்டுக்கு கூடுதலாக 2.50 லட்சம் மரணங்கள் பதிவாக வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், காலநிலை மாற்றத்தால் மனித சுகாதாரத் துறைக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு காண தேசிய காலநிலை மாற்றம் மற்றும் மனித சுகாதார திட்டத்தை தொடங்கி உள்ளது. இதன் கீழ் காலநிலை மாற்றம் மற்றும் மனித சுகாதாரம் தொடர்பான செயல் திட்டமும் வெளியிடப்பட்டுள்ளது. இப்படி காலநிலை மாற்றத்தால் சுகாதாரத் துறையில் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு காண பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக அரசு சுகாதாரத் துறையை இணைக்காமல் இந்தக் குழுவை அமைத்துள்ளது.
இதைத் தவிர்த்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனை பாதுகாக்கும் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையும் இந்தக் குழுவில் சேர்க்கப்படவில்லை. பெண்கள் மற்றும் குழந்தைகள் காலநிலை மாற்றத்தால் எளிதில் பாதிக்கப்படக் கூடிய சமூகமாக உள்ளனர். குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காது என்று யுனிசெப் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தத் துறையின் தமிழக அரசின் நிர்வாக குழுவில் சேர்க்கப்படவில்லை.
இது குறித்து சென்னை காலநிலை செயல்பாட்டு குழுவைச் சேர்ந்த பொது சுகாதார ஆய்வாளர் மருத்துவர் விஷ்வஜா சம்பத்திடம் கேட்டபோது, "காலநிலை மாற்றம் தொடர்பாக கொள்கைகளை வகுக்கும்போது அதில் பாலின சமத்துவம் முக்கியமானது. ஒரு துறை ஒரு திட்டத்தை செயல்படுத்தம்போது அந்தத் திட்டத்தில் பாலின சமத்துவம் இருக்க வேண்டும். காலநிலை மாற்றத்தால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களாக உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்து துறையின் பிரிநிதித்துவம் இந்தக் குழுவில் இருக்க வேண்டும்.
காலநிலை மாற்றத்தால் மனிதர்களின் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் மற்ற உயிரினங்களும் பாதிக்கப்படும். பேரிடர் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக கடல் ஓரத்தில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனை செயல்பட முடியாத நிலைக்கு போகலாம். இதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் தங்களின் சுகாதாரத் தேவைக்கு அந்த இடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் செல்ல வேண்டியது வரும். எனவே, சுகாதாரத் துறையைச் இதில் சேர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.
செயல் திட்டத்தை தயார் செய்து விட்டு, அதன் பிறகு இவர்களைச் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பது சரியாக இருக்காது. எனவே, இந்த அரசு துறைகளுடன் இணைத்து, இது சார்ந்து செயல்பட்டு வரும் வல்லுனர்களையும் இந்த நிர்வாக குழுவில் இணைக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT