Published : 31 Oct 2022 01:46 PM
Last Updated : 31 Oct 2022 01:46 PM

தமிழ் வழியில் மருத்துவப் படிப்புக்கு புதிய மருத்துவக் கல்லூரி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னையில் தமிழ் வழியில் மருத்துவப் படிப்பை வழங்க விரைவில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கப்படவுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.32 லட்சம் மதிப்பில் நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கி, பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மையங்களை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பல்வேறு புதிய மருத்துவ கட்டமைப்புகள் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை இல்லாமல் புற்றுநோய் மற்றும் முதுகு தண்டுவட பாதிப்பினால் வலியோடு போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு மாற்று சிகிச்சையாக ரேடியோ அலைவரிசை வலி நிவாரண சிகிச்சை ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. வேறு மருத்துவமனையில் இல்லாத வகையில் இந்த மருத்துவமனையில் ரோட்டரி சங்கம் உதவியோடு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் இதுபோன்ற ரேடியோ அலைவரிசை வலி நிவாரண சிகிச்சை மையம் ரோட்டரி சங்கம் உதவ வேண்டும் என்று ரோட்டரி கோரிக்கை வைத்துள்ளோம். தனியார் மருத்துவமனையில் ரூ 40,000 வரை இந்த சிகிச்சைக்கு செலவு ஆகும். ஆனால், ஓமந்தூரார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்கான மருத்துவ செலவு, முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

பெண்களுக்கு மனநல சிகிச்சை, புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை மையம், யோகா, உணவு கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து சிகிச்சை மையம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் அதிநவீன கருவி இன்று இந்த மருத்துவமனையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தமிழ் வழியில் மருத்துவக் கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதனடிப்படையில் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் ஒரு கல்லூரி அமைத்திட வேண்டும் என்றும், அது தமிழ் வழியில் மருத்துவக் கல்லூரியாக இருக்க வேண்டும் என்றும் கேட்டு இருந்தோம். ஆனால், முதலில் மருத்துவக் கல்லூரி இல்லாத இடங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்கலாம் என முடிவு செய்துள்ளோம்.

இதன்படி தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் வேண்டுமென்று மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு மருத்துவக் கல்லூரிக்கான ஒப்புதல் கிடைத்தவுடன் சென்னையில் தமிழ் வழியில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மூன்று மருத்துவப் பேராசிரியர்கள் கொண்ட குழு கடந்த ஓராண்டாக முதலாண்டு மருத்துவக் கல்லூரி பாடப் புத்தகங்களை மொழிபெயர்த்து வருகின்றனர். இந்த பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்படும். பின்பு வல்லுநர்களிடம் கொடுத்து சரிபார்க்கப்பட்டு முதல்வர் வெளியிடுவார்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x