Published : 31 Oct 2022 12:17 PM
Last Updated : 31 Oct 2022 12:17 PM
சென்னை: தமிழகத்தில் புதிதாக XBB என்ற உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக GISAID அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உருமாறிய ஒமிக்ரான் வகை தொற்றான XBB என்ற தொற்று பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. GISAID (Global Initiative on Sharing Avian Influenza Data) என்ற சர்வதேச ஆராய்ச்சி அமைப்பின் ஆய்வில் இது தெரியவந்துள்ளது. தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் இவ்வகை பாதிப்புகள் கண்டறியப்பட்டிருப்பதாக இந்த அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
வைரஸின் மாற்றங்களைக் கண்காணித்து வரும் GISAID என்ற அமைப்பின் ஆய்வில் தமிழகத்தில் 175 பேரும் , மேற்கு வங்கத்தில் 103 பேரும் என நாடு முழுவதும் 380 பேர் XBB வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒடிசா, மகாராஷ்டிரா, டெல்லி, புதுச்சேரி, கர்நாடகா, குஜராத் , ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் இவ்வகை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. XBB வகை கரோனா மாறுபாடு முதன்முதலில் சிங்கப்பூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் கண்டறியப்பட்டது. இதுவரை 17 நாடுகளில் இந்த பாதிப்பு பதிவாகியுள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, " வைரஸ்களின் உருமாற்றம் என்பது பொதுவானது தான். தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வைரஸ் உருமாற்றம் ஏதும் தற்போது கண்டறியப்படவில்லை. கரோனா பாதிப்புகள் அனைத்தும் கட்டுக்குள் உள்ளது. தொடர்ந்து வைரஸ்களின் உருமாற்றம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" இவ்வாறு சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT