திருப்பூரில் ஒருவரிடம் விசாரண: நாகையில் 2 பேர் வீடுகளில் போலீஸார் சோதனை
நாகப்பட்டினம்/திருப்பூர்: நாகையில் 2019-ம் ஆண்டில் என்ஐஏ சோதனை நடத்திய இருவர் வீடுகளில் நேற்று வெளிப்பாளையம் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோன்று திருப்பூரில் ஒருவரிடம் போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். நாகப்பட்டினம் மாவட்டம் மஞ்சக்கொல்லையைச் சேர்ந்தவர் ஹாரிஸ் முகமது(38), சிக்கலைச் சேர்ந்தவர் அசன் அலி(35). இவர்கள் 2 பேரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் மாவட்ட நிர்வாகிகளாக இருந்தனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரது வீடுகளிலும் வெளிப்பாளையம் காவல் ஆய்வாளர் வெற்றிவேல் தலைமையில் 10-க்கும் அதிகமான போலீஸார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். ஹாரிஸ் முகமது வீட்டில் காலை 10 மணி முதல் முற்பகல் 11 மணி வரையும், அசன் அலி வீட்டில் முற்பகல் 11.30 மணி முதல் நண்பகல் 12.40 மணி வரையும் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். தேசிய புலனாய்வு முகமையின் அறிவுறுத்தலின்பேரில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இலங்கையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 2019-ல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், இவர்கள் இருவரது வீடுகளிலும் அப்போது சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான விசாரணையில் என்ஐஏ போலீஸார் ஈடுபட்டுவரும் நிலையில், திருப்பூர் ராக்கியாபாளையம் அருகே அப்துல் ரசாக் (32) என்பவரிடம் நல்லூர் போலீஸார் நேற்று விசாரித்தனர்.
ஏற்கெனவே என்ஐஏ விசாரித்தது: இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இவரை என்ஐஏ அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி விடுவித்தனர். இந்நிலையில், கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, என்ஐஏ அதிகாரிகள் உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகர போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் நல்லூர் போலீஸார் அப்துல்ரசாக்கிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரிடம் அப்துல் ரசாக் தொலைபேசியில் தொடர்பு கொண்டதகவல் கிடைத்ததின் அடிப்படையில் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
