Published : 31 Oct 2022 07:01 AM
Last Updated : 31 Oct 2022 07:01 AM

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணியை விரைவில் தொடங்க திட்டம்: ரயில்வே கோட்ட அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணிகளை நவம்பர் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில்நிலையம், 114 ஆண்டுகள் பழமையான,அழகான கட்டமைப்புகளைக் கொண்டநிலையமாகத் திகழ்கிறது. அதிகரித்துவரும் பயணிகள் போக்குவரத்தைக்கையாளும் விதமாக, இந்த ரயில் நிலையத்தைப் புதுப்பிக்கக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதவிர, இந்த நிலையத்தை உலகத் தரத்தில் மேம்படுத்த தெற்கு ரயில்வே தரப்பில் முன்மொழியப்பட்டது.

இதையேற்று, நவீன வசதிகளுடன் மறு சீரமைப்பு செய்ய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. பின்னர் ஒப்பந்தப் புள்ளியை இறுதி செய்து, ரூ.734 கோடியே 90 லட்சம் செலவில் மறு சீரமைப்பு செய்ய ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சென்னை ரயில்வே கோட்டம் 2 வாரங்களுக்கு முன்பு ஒப்பந்தம் வழங்கியது.

இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியது: எழும்பூர் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்ய ஐதராபாத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் கடந்த வாரம் எழும்பூர் ரயில் நிலையத்தை முழுமையாக ஆய்வு செய்தனர். எழும்பூர் ரயில் நிலையத்தின் வரைபடம் எடுத்து, அளவீடு செய்துள்ளனர். நவம்பர் முதல் வாரத்தில் பணியைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மறுசீரமைப்பு பணியை வரும் 2025-க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x