Published : 05 Nov 2016 08:33 AM
Last Updated : 05 Nov 2016 08:33 AM
தமிழ் இலக்கியம், சமயம் மற்றும் சட்டத்துறை சார்ந்த ஏராளமான நூல்கள் எழுதியவர் கா.சுப்பிர மணிய பிள்ளை. திருநெல்வேலி டவுனில் 1888-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி பிறந்தார். 1913-ல் ஆங்கிலத்திலும், 1914-ல் தமிழி லும் முதலாவதாக தேறி எம்.ஏ. பட்டம் பெற்றார். 1917-ல் எம்.எல். பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியின் முதல் விரிவுரையாள ராக இருந்து, சர்.பிட்டி.தியாக ராயரின் பேருதவியால், சட்டப் பேராசிரியரானார். 1919 முதல் 1927 வரை சட்டக் கல்லூரியில் பணியாற்றினார்.
அதன்பிறகு, திருநெல்வேலியில் தங்கி தமிழில் இலக்கிய வரலாறு மற்றும் பல அரிய நூல்களை எழுதினார். 1929-30-ல் அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றினார். அதன்பிறகு, திருநெல்வேலி நக ராட்சி உறுப்பினராகவும், சுவாமி நெல்லையப்பர் கோயில் தர்ம கர்த்தாவாகவும் பணி செய்தார். அப்போது தேவார, ஆகமப் பாட சாலைகளைத் தோற்றுவித்தார்.
1934-ல் சென்னை மாகாண தமிழர் முதலாவது மாநாட்டின் வரவேற்புக்குழு தலைவராக இருந்தார். 1937-38-ல் கா.சு.பிள்ளை, தம் நண்பர் இசைமணி சுந்தரமூர்த்தி ஓதுவாருடன் காஞ்சிபுரத்தில் தங்கியிருந்தார். அப்போது ‘பழந்தமிழ் நாகரிகம் அல்லது பொருளதிகார கருத்து’ என்ற சிறந்த ஆராய்ச்சி நூலையும், வானநூலையும் எழுதி முடித்தார். 1940-ல் மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் பணியேற்றார். தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் பல்துறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தம்முடைய 56-வது வயதில் 1945-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி காலமானார்.
கா.சுப்பிரமணிய பிள்ளை நினைவாக, திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரம் அருகே உள்ள நகர்மன்ற பூங்காவில் 13.10.1947-ல் நடுகல் நாட்டப்பட்டது. தற்போது இந்த நடுகல் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பூங்காவில் காந்தி சிலைக்கு அருகே அமைந்துள்ளது.
கா.சு.பிள்ளையின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் பல்வேறு அமைப்புகள் இந்த நடுகல்லுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றன. கடந்த 2013-ம் ஆண்டில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் பங்கேற்று பேசிய மறைந்த திறனாய்வாளர் தி.க.சி., திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கா.சு.பிள்ளையின் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
உறுதிமொழிகள் வீண்
இதுபோல் இந்த விழாவில் பங்கேற்ற அப்போதைய மாநகராட்சி மேயர் விஜிலா சத்தியானந்த், திருநெல்வேலி டவுன் பாரதியார் தெருவில் உள்ள நூலகத்துக்கு கா.சு.பிள்ளையின் பெயரை சூட்டவும், ஆண்டுதோறும் நவம்பர் 5-ம் தேதி அவரது பிறந்த நாளையும், ஏப்.30-ம் தேதி நினைவு நாளையும் மாநகராட்சி சார்பில் கொண்டாடவும், மாநகராட்சியில் ஒரு வீதிக்கு அவரது பெயரை சூட்டவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார். இந்த உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
தமிழக அரசாவது கா.சு.பிள்ளை நினைவாக விழா எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர் பிறந்த மாவட்ட மக்களிடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து திருநெல்வேலி சித்திரசபா அமைப்பாளர் பொன்.வள்ளிநாயகம் கூறும்போது, “கா.சு. பிள்ளை சட்ட வல்லுநர். அவரது உருவப்படத்தை தமிழகத்தின் அனைத்து நீதிமன்றங்களிலும் வைக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT