Published : 31 Oct 2022 04:35 AM
Last Updated : 31 Oct 2022 04:35 AM

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் குறைப்பு: எம்.பி. கண்டனம்

திருருநெல்வேலி: திருநெல்வேலி தொகுதி எம்பி ஞானதிரவியம் அறிக்கை: திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு மீட்டர்கேஜ் காலகட்டத் திலிருந்து இயக்கப்பட்டு வரும் (திருநெல்வேலி - சென்னை எழும்பூர்) நெல்லை விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கையை ரயில்வே நிர்வாகம் கணிசமான அளவில் குறைத்துள்ளது.

இவ்வாறு குறைக்கப்பட்ட முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பாதி பெட்டிகள் இந்திய அஞ்சல் துறை ஆர்எம்எஸ் சேவைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் நெல்லை விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்படாமல் பயணிக்கும் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே அனைத்து முக்கிய ரயில்களும் 24 பெட்டிகளுடன் இயங்கி வந்தது. தற்போது பெட்டிகளின் எண்ணிக்கை 20 முதல் 22 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறைக்கும்போது ஸ்லிப்பர் பெட்டிகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து, அதிகளவில் குளிர்சாதன பெட்டிகளாக மாற்றி தனியாருக்கு விற்றுவிட வேண்டும் என்று உள்நோக்கத்துடன் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

கடந்த 2007 வரை அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பக்கம் இரண்டு, பின்பக்கம் இரண்டு என முன்பதிவு செய்யப்படாத நான்கு பெட்டிகள் இணைக்கப்பட்டு வந்தன. 2007-ம் ஆண்டு தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் அப்போதைய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஏழை எளிய பயணிகளின் நலனுக்காக முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கையை நான்கிலிருந்து 6 ஆக உயர்த்துவதாக அறிவித்தார்.

2014 முதல் மோடி பதவியேற்ற பிறகு ரயில்வே அதிகாரிகள் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கையை 6-ல் இருந்து இரண்டாக குறைத்துள்ளனர். ஒரு சில ரயில்கள் ஒரே ஒரு முன்பதிவில் லாத பெட்டியுடன் இயக்கப்படுகின்றன.

அதிக மக்கள் நெருக்கடி நிறைந்த வழித்தடங்களில் ரயில்வே நிர்வாகம் புதிய ரயில்கள் எதையும் அறிமுகப் படுத்தவில்லை. நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்படாத நான்கு பெட்டிகள் உடனடியாக இணைக்கப்பட வேண்டும். இந்திய அஞ்சல் துறை ஆர்எம்எஸ் சேவைக்கு அரைப் பெட்டியை மட்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மேலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கையை 2015-க்கு முன்பு இருந்தது போன்று நான்கிலிருந்து 6- ஆக படிப்படியாக உயர்த்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x