Last Updated : 30 Oct, 2022 07:26 PM

1  

Published : 30 Oct 2022 07:26 PM
Last Updated : 30 Oct 2022 07:26 PM

புதுச்சேரி சுகாதாரத்துறையில் உள்ள பிரச்சினைகள் 3 மாதங்களில் சரிசெய்யப்படும்: துணைநிலை ஆளுநர் தமிழிசை

ஆய்வு செய்யும் புதுவை ஆளுநர்

புதுச்சேரி: மருத்துவத் துறை தொடர்பாக உங்களைவிட எனக்கு அதிகம் தெரியும் என செய்தியாளர்களிடம் கோபம் காட்டிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி சுகாதாரத்துறையில் உள்ள குறைபாடுகள் அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

புதுச்சேரியில் அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறை, மருந்துப் பொருட்களுக்கான பற்றாக்குறை, அவசர சிகிச்சை பிரிவில் மருந்துகள் இல்லாதது, ஸ்கேன் செயல்படாதது உள்ளிட்டவை தொடர்பாக திமுக குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையை இன்று மாலை பார்வையிட்டார். அப்போது தமிழிசை எழுப்பிய கேள்விகளுக்கு சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர். ஸ்ரீராமுலு விளக்கம் அளித்தார்.

ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை கூறியதாவது, "பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்க வேண்டிய மருத்துவ சேவை தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அவசரகால சிகிச்சை பிரிவில் சில குறிப்பிட்ட மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாகத் தெரிகிறது. இதேபோல் அரசு ஆம்புலன்ஸ்களிலும் சில பிரச்சினைகள் உள்ளன. ஆம்புலன்ஸில் உள்ள ஸ்ட்ரெச்சர் சரியாக இல்லை. இதனை நான் நேரடியாகவே பார்த்தேன். சுகாதாரத்துறையில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் சரி செய்யப்படும். ஏற்கனவே ரூ. 5 கோடி மதிப்பீட்டில் ஆஞ்சியோகிராம் கருவி வாங்கப்பட்டிருக்கிறது. அது ஒன்றரை மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும். இதேபோன்று ஸ்கேன் கருவிகள் வாங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பொதுமக்கள் ஸ்கேன் எடுக்க வரும்போது, உடனடியாக எடுப்பதில்லை என்ற புகார் உள்ளது. இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளேன். தொடர் கண்காணிப்புகள் இருக்கும். மருத்துவத்துறையினருடன் நாளை நான் கலந்தாலோசனை செய்ய இருக்கிறேன். அப்போது, என்னென்ன குறைபாடுகள் இருக்கின்றன என்பது குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் ஆராயப்பட்டு மூன்று மாதங்களுக்குள் அனைத்தும் சரி செய்யப்படும். ஊழியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வரவில்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பெஸ்ட் புதுச்சேரியை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.

உங்களை விட எனக்கு மருத்துவத்துறை தெரியும்: ஸ்ட்ரெட்சர் கூட சரியாக இல்லாத சூழலில் எப்படி "பெஸ்ட் புதுச்சேரி" வரும் என்று செய்தியாளர் கேட்டதற்கு, "கடந்த ஐந்து ஆண்டுகளிலும் இந்த நிலைதானே இருந்தது. ஒன்றரை ஆண்டுகளை மட்டுமே கேட்கிறீர்களே. மூன்று மாதங்களில் சரிசெய்வோம். உங்களை விட எனக்கு மருத்துவத்துறையைப் பற்றி தெரியும். உங்களை விட நோயாளிகளை பாதுகாக்கும் அக்கறை எனக்கு அதிகமுண்டு. தெரியாமல் பேசாதீர்கள். கண்டுகொள்ளாமல் இருப்பவர்களை நீங்கள் கேட்பதில்லை. சரி செய்ய முயற்சிப்போரைதான் கேள்வி கேட்பீர்கள்" என்று கோபத்துடன் குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x