Published : 30 Oct 2022 12:45 PM
Last Updated : 30 Oct 2022 12:45 PM
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் சோழர்கால பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 2-வது நாள் நடைப்பயணத்தை அரியலூரில் இன்று காலை தொடங்கினார்.
முதல்நாள் பயணத்தை கீழப்பழுவூரில் நேற்று தொடங்கிய அன்புமணி ராமதாஸ், கரைவெட்டி, கண்டராதித்தம், திருமழபாடி, காமரசவல்லி, சுத்தமல்லி, கோவிந்தபுத்தூர், ஸ்ரீபுந்தான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள், பாசன வாய்க்கால்கள், ஆறுகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். மேலும், அப்பகுதி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோரை அவர் சந்தித்தார்.
இரண்டாம் நாள்: இரண்டாம் நாளான இன்று அன்புமணி ராமதாஸ், அரியலூரில் தனது நடைப்பயணத்தை தொடங்கினார். அரியலூர் ரயில்வே மேம்பாலத்தின் அருகிலிருந்து நடைபயணத்தை தொடங்கிய அன்புமணி ராமதாஸ், அங்கிருந்து அரியலூர் பேருந்து நிலையம் வந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடை மீது ஏறி உரையாற்றினார். முன்னதாக வாரணவாசி கிராமத்தில் உள்ள புதை உயிரி படிவ அருங்காட்சியத்தை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து வி.கைகாட்டி, தத்தனூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் விவசாய சங்க பிரதிநிதிகள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோரை அவர் சந்திக்கிறார்.
இதன் தொடர்ச்சியாக கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சோழகங்கம் என்னும் பொன்னேரியை பார்வையிடும் அன்புமணி ராமதாஸ் அங்கு பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். தொடர்ந்து காட்டுமன்னார்குடியில் உள்ள வீராணம் ஏரியை பார்வையிடுகிறார். அத்துடன் இரண்டு நாள் பயணத்தை அவர் நிறைவு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமக நிர்வாகிகள், வன்னியர் சங்க நிர்வாகிகள் பலரும் இந்த நடைப்பயணத்தின்போது அன்புமணி ராமதாசுடன் பயணித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT