Published : 25 Nov 2016 12:38 PM
Last Updated : 25 Nov 2016 12:38 PM
இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும். அதே சமயம் எங்களுக்கு அடிப்படை வசதிகளையும் செய்துதர வேண்டும் என கொடைக்கானலில் உள்ள கருவேலம்பட்டி மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் உள்ள மலைகிராமம் கருவேலம்பட்டி. தற்போது பளியர் இனத்தைச் சேர்ந்த 39 குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. எந்த வீட்டிலும் மின் வசதி கிடையாது. இந்த கிராமத்துக்குச் செல்ல சாலை வசதியில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு கருங்கற்களை பரப்பி சாலையை அமைத்துள்ளனர். அந்த கற்கள்தான் தற்போதுவரை போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க 7 கி.மீ. நடந்து சட்டப்பாறைக்கு வரவேண்டும். அங்கிருந்து மினி பஸ்சில் ஆயக்குடி சென்று பொருட்களை வாங்கி திரும்ப வேண்டும். தண்ணீருக்கு ஊருக்கு அருகிலேயே சிறிய காட்டு ஓடை உள்ளது. மருத்துவ சிகிச்சைக்கு 7 கி.மீ. நடந்து வடகவுஞ்சிக்கு செல்ல வேண்டும்.
வனப்பகுதிக்குள் சென்று ஈச்சமாறு சேகரித்தல், தேன் சேகரித்தல் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் சொற்ப பணத்தில் குடும்பத்தை நடத்துகின்றனர். தற்போது இவையும் குறைந்துவிட்டதால், இப்பகுதியில் தோட்டம் வைத்துள்ளவர்களிடம் விவசாய பணிகளுக்குச் சென்று வருவாய் ஈட்டுகின்றனர்.
இவர்கள் யாருக்கும் ஊரில் சொந்த இடம் இல்லை. வனப்பகுதியிலேயே மண்வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்கள் ஆதிவாசிகள் என்பதால் இதற்கு வனச்சட்டம் அனுமதியளிக்கிறது.
இங்கு 2006-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்ட பின், மலைவாழ் மக்களின் குழந்தைகள், 5-வது வகுப்பு வரை படித்துவருகின்றனர். ஆனால், 6-வது வகுப்பில் சேர தொலைதூரத்தில் அமைந்துள்ள பள்ளிக்குச் செல்ல வேண்டியுள்ளதால், படிப்பை பாதியிலேயே நிறுத்தும் சூழல் உள்ளது. தங்களுக்கு சாலை, மருத்துவம், குடிநீர் போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மலையில் வாழவே விருப்பம்
கருவேலம்பட்டியில் வசிக்கும் ராசாத்தி கூறியதாவது:
எங்களை இங்கிருந்து வெளியேறி வருமாறு அதிகாரிகள் அழைக்கின் றனர். வீட்டுமனைப் பட்டா, வீடுகட்ட உதவி, வாழ்வாதாரம் ஏற்படுத்தித் தருவதாகவும் கூறுகின்றனர். ஆனால், எங்கள் மூதாதையர் வாழ்ந்த இந்த மண்ணை விட்டு பிரிய எங்களுக்கு மனமில்லை. இந்த ஊரிலேயே அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகம் செய்துதர வேண்டும்.
இருக்கும்வரை இங்கேயே இருந்துவிடுகிறோம். எனினும், அடுத்த தலைமுறையினரை நினைத்தால் கவலையாக உள்ளது. அவர்களும் எங்களைப்போல் வனத்துக்குள்ளேயே வசிக்க வேண்டுமா என்ற எண்ணமும் ஏற்படுகிறது என்றார்.
தனலட்சுமி கூறியதாவது:
வனத்துக் குள்ளேயே வசித்து பழகிவிட்டோம். இங்கிருந்து வெளியே வர எங்களுக்கு விருப்பமில்லை. யாராவது நோய்வாய்ப்பட்டால் அவர்களை டோலி கட்டி தூக்கிச் செல்ல வேண்டிய நிலைதான் உள்ளது. இதுவரை தண்ணீர் பிரச்சினை இங்கு இல்லை. இந்த ஆண்டுதான் மழைபொய்த் ததால் குடிநீருக்காக ஒரு கி.மீ. தூரம் நடந்து சென்று ஓடையில் தண்ணீர் எடுத்து வருகிறோம். அங்கு யானை நடமாட்டம் இருப்பதால் பயமாக உள்ளது.
இப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தந்தால், வாகனப் போக்குவரத்து எளிதாக இருக்கும். எங்கள் குழந்தைகள் வெளியூர் சென்று படித்துவர வாய்ப்பு கிடைக்கும்.
நாங்கள் இங்கேயே இருப்பது என்று முடிவு செய்துவிட்டோம். இங்கே இருப்பதா, வேண்டாமா என்பதை அடுத்த தலைமுறையினர் முடிவெடுத்துக்கொள்ளட்டும் என்றார்.
வெளியேறினால்தான் உதவ முடியும்
இவர்களின் கோரிக்கைகள் குறித்து மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:
இந்த கிராமத்தில் மக்கள்தொகை குறைவாக உள்ளது. இதனால், இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசிடம் அனுமதிபெற வேண்டிய நிலை உள்ளது.
சாலை அமைக்கும் வழியில் காப்புக் காடு உள்ளது. எனவே, சாலை அமைப்பது சாத்தியமில்லை. இந்த ஊரில் உள்ள யாருக்கும் சொந்தமாக வீட்டுமனை இல்லை என்பதால், இவர்களுக்கு அரசின் திட்டத்தில் வீடு கட்டித்தர முடியாத நிலை உள்ளது.
குழந்தைகளின் கல்வியைப் பொறுத்தவரை, அவர்கள் 5-வது வகுப்புக்கு மேல் படிக்க வெளியூர்களில் உள்ள அரசு விடுதிகளில் தங்கி படிக் கலாம்.
இவர்கள் அனைவரும் வனப்பகுதியை விட்டு வெளியேறி வந்தால் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவும், வீடு கட்டித்தரவும் மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்றனர்.
வனப்பகுதியை விட்டுப் பிரிய மனமில்லாமலும், தங்கள் அடுத்த தலைமுறையினரின் எதிர்காலத்தை நினைத்தும் இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கின்றனர் கருவேலம்பட்டி மலை கிராம மக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT