Published : 30 Oct 2022 04:05 AM
Last Updated : 30 Oct 2022 04:05 AM

தொடர் மழை, பனிப்பொழிவால் ஓசூர் பகுதியில் முருங்கைக் காய் மகசூல் பாதிப்பு: சந்தையில் கிலோ ரூ.100-க்கு விற்பனை

ஓசூர்: ஓசூர் பகுதியில் தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக முருங்கைக் காய் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சந்தையில் முருங்கைக் காய் கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஓசூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவலப்பள்ளி, பாகலூர், பெலத்தூர், பூனப்பள்ளி, மத்தம் அக்ரஹாரம் மற்றும் சூளகிரி, உத்தனப்பள்ளி, தளி, கெலமங்கலம் உள்ளிட்ட கிராமங் களில் தோட்டப் பயிராகவும், தனி பயிராகவும், ஒரு சில இடங்களில் ஊடுபயிராகவும் முருங்கை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

சித்த மருத்துவத்தில் முருங்கை மரத்தின் காய், பூ, இலை, வேர், பட்டை, விதை, பிசின் ஆகியவை மருந்து தயாரிக்க பயன்பட்டு வருகிறது. மருத்துவ குணம் நிறைந்த முருங்கைக் காய் மற்றும் கீரையை பொதுமக்கள் அதிகளவில் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், சந்தையில் முருங்கைக் காய் மற்றும் கீரைக்கு வரவேற்பு இருக்கும்.

இந்நிலையில், ஓசூர் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், முருங்கைக் காய் விலை உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையானது. தற்போது, ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் சில்லரை விலையில் ரூ.10-க்கு 3 முருங்கைக் காய் விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ஒரு காய் ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக ஓசூர் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் கயிலைமன்னன் கூறும்போது, “ஓசூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் நடப்பாண்டு பருவமழை காலகட்டத்தில் பெய்த தொடர் மழையால் முருங்கைக் காய் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உழவர் சந்தைக்கு வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது” என்றார்.

இது தொடர்பாக தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் கூறியதாவது: மிதமான வெப்பநிலையில் முருங்கை மரம் வளரும். அதிகமான மழை மற்றும் குளிரால் மகசூல் பாதிக்கப்படும். நடப்பாண்டு, தென்மேற்குப் பருவமழை காலகட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்தது. மேலும், தற்போது இரவில் அதிக பனிப்பொழிவும் இருந்து வருகிறது.

இதனால், முருங்கை பூக்கள் உதிர்ந்து, இலைகள் பழுத்து காய் பிடிப்பு குறைந்துள்ளது. இதனால், சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. முருங்கை மரத்தின் கிளைகளை வெட்டி நடவு செய்யும் முறையில் மகசூல் குறைவாக கிடைக்கும். விதை மூலமாக பயிரிடுவது நல்ல மகசூலை கொடுக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x