Published : 27 Nov 2016 11:48 AM
Last Updated : 27 Nov 2016 11:48 AM
எஸ்.எம்.விஜயானந்த் எளிமை யானவர். காந்தியவாதி. சிந்தனை, செயலில் காந்தி யத்தை கடைபிடிப்பவர். கேரளத்தில் பஞ்சாயத்து ராஜ்ஜியங்களின் வெற் றிக்குக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர். ஏ.கே.அந்தோணி மற்றும் ஈ.கே.நாயனார் ஆட்சிகளில் பஞ்சாயத்து ராஜ்ஜியம் சட்டங்கள் இயற்றப்பட்டபோது அதற்கு செயல் வடிவம் கொடுத்தது இவரே. 11 ஆண்டுகள் கேரள மாநில பஞ்சாயத் துராஜ் துறையின் செயலராக இருந்தார். மாநில திட்டக் குழு உறுப்பினர் மற்றும் ஜனநாயக அதி காரப் பரவலுக்கான சென் கமிஷன் உறுப்பினர் - செயலர் பதவிகளை வகித்தார். மோடியின் மத்திய அரசாங்கத்தில் பஞ்சாயத்துராஜ் துறைச் செயலாளராக இருந்தவர், தற்போது கேரளத்தின் தலைமைச் செயலாளர் பொறுப்பை ஏற்றிருக் கிறார். சரளமாக தமிழ் பேசும் இவரை எப்போதும் எளிதில் அணுகலாம். அப்படி அணுகிய ஒரு தருணத்தில் ‘தி இந்து’-வுக்காக பேசினார்.
கேரளத்தில் பஞ்சாயத்து ராஜ்ஜியம் நடைமுறைக்கு வந்தபோது ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லுங்களேன்?
சிறிய சிக்கல்கூட ஏற்படவில்லை. நேருவின் காலகட்டத்தில் இங்கே பஞ்சாயத்து ராஜ்ஜியத்தை நிறை வேற்றிய இ.எம்.எஸ்.நம்பூதிரி பாட் ஆகட்டும், பின்னாளில் நரசிம்ம ராவ் காலத்தில் பஞ்சாயத்து ராஜ்ஜியத்தை நிறைவேற்றிய ஏ.கே.அந்தோணியாகட்டும் இருவரும் எதிரெதிர் கட்சிகளைச் சேர்ந்தவர் களாக இருந்தாலும் காந்தியம் என்கிற புள்ளியில் ஒன்றிணைந்தார்கள். ‘பிக் பேங்’ என்று சொல்வோமே... மிகப் பெரிய ஒரே ஒரு அழுத்தம், ஒட்டு மொத்த மக்களின் தன்னெழுச்சி இவை அனைத்தும் ஒன்றுசேர்ந்து உருவாக்கிய பஞ்சாயத்து ராஜ்ஜியம் இது. அது மாபெரும் புரட்சியைப் போல நடந்தது. மாபெரும் கொண்டாட்டத் தைப் போல நடந்தது என்றும் சொல் லலாம். கட்சிகள், தலைவர்கள், தொண்டர்கள், மக்கள் என அனை வரும் ஒருசேர எடுத்த முடிவு அது!
கேரளத்தில் பஞ்சாயத்து ராஜ்ஜியம் வெற்றிகரமாக நீடிக்க என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
மக்கள், மக்கள் மட்டுமே. கேரள மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு என்பது ரத்தத்தில் ஊறியது. கேள்வி கேட்பது, தவறை தட்டிக் கேட்பது என்பது மரபு வழியாகத் தொடரும் விஷயம். அவை ஸ்ரீ நாராயண குரு, அய்யன் காளி ஆகியோரிடம் இருந்து வந்திருக்கலாம் என்று கருதுகிறேன். இங்கே அரசியல் நாகரிகம் மேலே இருந்து கீழே செல்லவில்லை. மாறாக, மக்களிடம் இருந்து தலை வர்களுக்குச் செல்கிறது. தவறு செய்ய தலைவர்கள் தயங்குவார்கள். ஊழல்கள் குறைவு. குற்றங்கள் குறைவு. அடிப்படை அரசியல் நாகரிகம், இயற்கையைப் பேணுவது ஆகியவை ஒரு பயிற்சியைப் போல மக்களுக்குப் பழகிவிட்டது.
ஆனால், பிரச்சினைகளே இல்லையா? பின்னடைவுகள், சவால்களும் உண்டு தானே?
ஆமாம். பழங்குடியினரைத் திட்டங்களுக்குள் கொண்டுவர இயல வில்லை. இத்தனைக்கும் அவர்கள் இனக்குழு வழக்கப்படியே கிராம சபைகளை நடத்தலாம் என்றுச் சொல்லியிருக்கிறோம். கல்வி பெறுவது உட்பட எதற்குமே அவர்கள் முன்வருவதில்லை. அதேசமயம் உயிரின பன்மையைப் பேணுவதில் அவர்கள் எவ்வளவு முக்கியத்துவம் என்ன என்பதையும் நாங்கள் அறி வோம். குறிப்பாக பணியர், சோழ நாயக்கர் போன்றோரை சென்ற டையவே முடியவில்லை. ஆனாலும், விடாமுயற்சியுடன் செயல்படுகிறோம். தவிர, உயர் நடுத்தர மற்றும் உயர் வருவாய் பிரிவினரை கிராம சபைக் கூட்டம் மற்றும் குடும்ப ஸ்ரீ (மகளிர் சுய உதவிக் குழுக்கள்) ஆகியவற்றில் பங்கேற்க வைப்பது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.
தேசிய அளவில் பஞ்சாயத்து ராஜ் ஜியம் வெற்றி பெற்றிருக்கிறதா?
கேரளம், கர்நாடகத்தில் சிறப்பாக இயங்குகிறது. மேற்கு வங்கத்தில் பரவாயில்லை. பொதுவாக பார்த்தோ மானால் கடந்த 20 ஆண்டுகளில் பஞ்சாயத்து ராஜ்ஜியம் நிலை பெற்றுவிட்டது. இனி, அதனை ஒன்றும் செய்ய முடியாது. நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன. பெரும்பான்மை கிராமங்களில் குடிநீர், கழிப்பறை, சாலைகள் போன்ற அடிப்படை வசதிகள் நிறை வேற்றப்பட்டிருக்கின்றன. பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் விழிப் புணர்வு பெற்றிருக்கிறார்கள். முன்பு அவர்களிடம் புலம்பல் மட்டுமே இருந்தது. தற்போது கேள்வி கேட் கிறார்கள். சமூகத்தை ஜனநாயகப் படுத்தியிருக்கிறோம். சமூக சமத்து வம், பாலின சமத்துவம் முன்பை விட மேம்பட்டிருக்கிறது. எல்லாவற் றுக்கும் மேலாக மக்கள் கேள்வி கேட்க, அவர்களுக்கு மிக அருகில் ஒரு ஆளை நிறுத்தி யிருக்கிறோம்.
ஆனால், 73-வது அரசியல் சாசன சட்டப் பிரிவின் இரண்டு முக்கிய நோக்கங்களான பொருளாதார வளர்ச் சியும், சமூக நீதியையும் அடைந்து விட்டோம் என்று சொல்ல இயலுமா?
நிச்சயமாக இல்லை. இரண்டைமே அடையவில்லை. இதற்கு காரணங்கள் இருக்கின்றன. இன்று எத்தனை மாநிலங்கள் தங்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உண்மையான தன்னாட்சி அதிகாரங்களைக் கொடுத் திருக்கின்றன? தேசம் முழுவதுமே பரவலாக பஞ்சாயத்து ராஜ்ஜியங் களுக்கு முழுமையான தன்னாட்சி அதிகாரம் இன்னும் கிடைக்கவில்லை. குறைவான அதிகாரம், குறைவான நிதி, மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமை, ஊடகங்கள் ஆதரவின்மை, அதி காரத்தை பகிர விரும்பாத மாநில அரசுகள், நாடாளுமன்ற, சட்ட பேரவை உறுப்பினர்களின் ஆதிக்கம், அதிகாரிகளின் ஆதிக்கம் இவை எல்லாம் பஞ்சாயத்து ராஜ்ஜியத்தை முடக்கிப்போட்டிருக்கின்றன. ஆனா லும் இவ்வளவு நெருக்கடிகளுக்கு இடையிலும் நல்ல தலைமை அமைந்தால் குறைந்த அளவு வாய்ப்புகளைக் கொண்டு சிறந்த ஊராட்சிகளை உருவாக்க முடியும். அதற்கு இந்தத் தொடரில் இடம்பெற்ற தமிழகத்தின் முன்னுதாரணமான கிராமப் பஞ்சாயத்துகளே சாட்சி.
அப்படியெனில் நமது நாட்டில் பஞ்சாயத்து ராஜ்ஜியத்தின் எதிர் காலம் என்ன?
கவலைப்படத் தேவையில்லை. பஞ்சாயத்து ராஜ்ஜியம் என்பது ஒரு திட்டமோ, அமைப்போ கட்சியோ அல்ல. அது ஒரு சித்தாந்தம். அந்த சித்தாந்தத்தை சட்டரீதியாக வலுப் படுத்தியிருக்கிறது 73, 74-வது இந்திய அரசியல் சாசன சட்டப் பிரிவு. எனவே, அதனை அழிக்க முடியாது. மேலும் பஞ்சாயத்து ராஜ்ஜியங்கள் வலுவடைந்துகொண்டே செல்லுமே தவிர, பலவீனமடையாது. இதோ சமீபத்தில் வரலாறு காணாத அளவில் மத்திய அரசின் 14-வது நிதிக்குழு பஞ்சாயத்துக்களுக்கு நான்கு லட்சம் கோடி ரூபாயை நிதி ஒதுக்கி யிருக்கிறது. ஆனால், நிதியை அப்படியே தந்துவிட மாட்டார்கள். திட்டங்களுடன் வரவேண்டும். மிகப் பெரிய வாய்ப்பு இது. இதை தவற விடக் கூடாது என்று நாங்கள் ஒரு நிபுணர் குழுவை அமைத்தோம். அனைத்து மாநிலங்களுக்கும் நேரில் சென்றோம்.
ஒவ்வொரு மாநிலத்துக்கு ஒரு நிபுணரை நியமித்துக்கொடுத்தோம். மேற்கண்ட நிதியில் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றலாம்? உங்கள் மாநிலத்தை எப்படி எல்லாம் முன்னேற்ற முடியும் என்று விளக்கினோம். கேரளத்தின் முன்னோடி கிராமங்களுக்கு நேரில் அழைத்து வந்து காட்டினோம். உங்கள் மாநிலத்திலும் இப்படி மிக எளிதாக செய்ய முடியும் என்று சொன் னோம். ஆந்திரம், பிஹார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் ஆர்வமுடன் எங்களுடன் நேரம் ஒதுக்கிப் பேசினார்கள். அசாம், ஒடிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர், நாகாலாந்து, மிசோராம், சிக்கிம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, கோவா உள்ளிட்ட மாநிலங்கள் மும்முரமாக திட்டங்களை வகுத்து வருகின்றன. தமிழகத்திலும் அமைச்சரை சந்தித்து விஷயத்தை சொல்லிவிட்டு வந்திருக்கிறோம். என்ன செய்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
- பயணம் தொடரும்...
படம்: மு.லெட்சுமி அருண்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT