Published : 29 Oct 2022 08:23 PM
Last Updated : 29 Oct 2022 08:23 PM
சென்னை: சென்னை வெள்ளத்தை தடுக்க ‘மாஸ்டர் பிளான்’ ஒன்றை தயார் செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் பருவமழையின்போது சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். பொதுச் சொத்துகளுக்கு அதிக அளவு சேதம் ஏற்படுகிறது. இதைத் தடுக்க ஒவ்வொரு ஆண்டும் மழைநீர் வடிகால் பணிகளுக்கு சென்னை மாநகராட்சி பல நூறு கோடி ரூபாயை செலவு செய்கிறது. ஆனால், சென்னையில் வெள்ள பாதிப்பு தொடர்ந்து ஏற்பட்டு கொண்டே உள்ளது. இதைத் தடுக்கவும், சென்னையில் மழைநீரால் ஏற்படும் பேரிடரை தவிர்க்கவும் சென்னை மற்றும் அதன் புறநகரை இணைத்து, வெள்ளக் கட்டுப்பாட்டு பெருந்திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதியுதவியுடன், வெள்ளக் கட்டுப்பாட்டு பெருந்திட்டம் செயல்படுத்தப்படும். இவற்றில் சென்னை மட்டுமின்றி, புறநகரங்களையும் இணைத்து செயல்படும். இதுதொடர்பான ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் சமீபத்தில் நடந்தது. இதில், சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை சார்பில் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதில் ‘சென்னையில், 1947, 1976, 1985, 1998, 2002, 2005, 2015 ஆகிய ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழையின்போது மாநகரில் பெரிய அளவிலான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, 2015-ல் பெரிய அளவிலான பேரிடாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் 289 பேர் மரணம் அடைந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாரத்தை இழந்தனர். பொதுப் போக்குவரத்து முடங்கியதுடன், பல்வேறு சேவைகளும் பாதிக்கப்பட்டது. இதுபோன்ற பேரிடர்களை தடுக்க, ‘வெள்ளக் கட்டுப்பாட்டு பெருந்திட்டம்’ உதவியாக அமையும்’ என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது" என அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT