Published : 29 Oct 2022 06:12 PM
Last Updated : 29 Oct 2022 06:12 PM
சென்னை: "அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் ஒவ்வொரு ஆண்டு நெல்லிற்கான ஈரப்பதத்தை மாற்றி மாற்றி அறிவிக்காமல், இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அனைத்து காலங்களிலும் நெல்லிற்கான ஈரப்பதத்தை ஒரே சீரான சதவீதத்தை அறிவிக்க வேண்டும்" என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "நடப்பு நெல் கொள்முதல் சீசன் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக நல்ல மழை பெய்தது. இதனால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்ததால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
டெல்டா மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரித்த இந்திய உணவு கழக தரக்கட்டுப்பாட்டு குழுவினர் நெல் மணிகளை ஆய்வகத்தில் பரிசோதித்து மத்திய அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில், நெல் கொள்முதலை 19 சதவீதம் வரை உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்நிலையில், காலம் தாழ்த்தி மத்திய அரசு அறிவித்துள்ள 19 சதவீதம் போதாது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் ஒவ்வொரு ஆண்டு நெல்லிற்கான ஈரப்பதத்தை மாற்றி மாற்றி அறிவிக்காமல், இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அனைத்து காலங்களிலும் நெல்லிற்கான ஈரப்பதத்தை ஒரே சீரான சதவீதத்தை அறிவித்து விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT