Published : 29 Oct 2022 06:11 PM
Last Updated : 29 Oct 2022 06:11 PM
புதுச்சேரி: 24 மணி நேர கடைகள் திறப்பால் புதுச்சேரியில் கலாசாரம் முற்றிலம் சீர்குலையும். எனவே இந்த அறிவிப்பை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இந்திய தொழில் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று புதுச்சேரி மாநிலத்தில் 24 மணி நேரமும் வர்த்தக வியாபார நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்துள்ளது தவறான ஒன்றாகும். முதலில் இந்திய தொழில் கூட்டமைப்பு என்றால் என்ன? அது மத்திய அரசின் தொழில் துறை சார்ந்ததா? மத்திய மாநில அரசுகளுக்கு சம்பந்தம் இல்லாத ஓர் அங்கமாக இந்திய தொழில் கூட்டமைப்பு உள்ளது என்றால் அதன் கோரிக்கையை நாம் ஏற்க வேண்டிய அவசியம் என்ன?
இது சம்பந்தமாக பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டதா? சட்டம் - ஒழுங்கு காவல்துறையின் அனுமதி கேட்கப்பட்டதா? நகர் முழுவதும் தினசரி உருவாகும் குப்பை கூலங்களை இரவு நேரத்தில் தான் தூய்மைப் பணியாளர்களை கொண்டுக் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரவு முழுவதும் கடைகள் திறந்திருந்தால் தூய்மைப் பணி எவ்வாறு செயல்படுத்த முடியும். 24 மணி நேர கடை திறப்பு உத்தரவால் நிச்சயம் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும். எனவே முழு இரவு நேர கடைகள் திறப்பு சம்பந்தமாக தொழில் துறையின் இந்த உத்தரவை முதல்வர் நம் மாநிலத்தின் எதிர்கால நலன் கருதி உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 10 தொழிலாளர்களுக்கு மேல் பணியாற்றும் கடைகள், வணிக நிறுவனங்கள், விடுதிகள், உணவகங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களையும் 24 மணி நேரமும் திறந்து வைக்கலாம் என அதிமேதாவித்தனமான அறிவிப்பை அரசின் சார்பு செயலர் வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பின் முழு நோக்கமும் இரவு நேரத்தில் மதுபானக் கடைகளை திறப்பது ஒன்று மட்டுமே குறிக்கோளாக கொண்டது. அரசியல் ஆதாயத்திற்காகவும், சாராய வியாபாரிகளை திருப்திப்படுத்தவும், மக்களைப் பற்றிய சிந்தனை துளியும் இன்றி சுயநல லாப நோக்கோடும்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
புதுச்சேரி மக்களின் உயிர் பிரச்சினைக்காக அரசு மருத்துவமனைகள் கூட 24 மணி நேரமும் செயல்படுவது இல்லை. இரவு நேரங்களில் மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை. அரசு மருத்துவக் கல்லூரியில் அவசர சிகிச்சை அரைநாளோடு மூடப்படும் அவலம் நிலவுகிறது. இரவில் விபத்தில் சிக்குபவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. அத்தியாவசிய தேவையான மருந்துகள்கூட இரவில் கிடைப்பதில்லை. இதை சரிசெய்ய எந்த முயற்சியும் அரசிடம் இல்லை.
புதுச்சேரியில் 24 மணி நேரமும் மதுபான கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும். ஏற்கெனவே ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காவலர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. அப்படியிருக்க, 24 மணி நேரமும் பாதுகாப்பு, போக்குவரத்து பணியில் யார் ஈடுபடுவார்? ஏற்கெனவே வார இறுதி நாட்களில் வெளிமாநில இளைஞர்கள் வருகையால், புதுச்சேரி கலாசார சீரழிவில் சிக்கி தவிக்கிறது. 24 மணி நேர அனுமதியளித்தால் புதுச்சேரி கலாசாரம் முற்றிலும் சீர்குலையும். போதைப்பொருள் நடமாட்டம், பாலியல் தொழில், பாலியல் வன்கொடுமைகள், அண்டை மாநில சமூக விரோதிகளின் கூடாரமாக புதுச்சேரி மாறும். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. புதுச்சேரி மாநிலத்தின் கலாசார சீரழிவை அதிமுக ஒருபோதும் ஏற்காது. புதுச்சேரி அரசு உடனடியாக இந்த அறிவிப்பை வாபஸ்பெற வேண்டும்’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT