Published : 29 Oct 2022 03:32 PM
Last Updated : 29 Oct 2022 03:32 PM
கோவை: கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தைக் கண்டித்து வரும் அக்.31-ம் தேதியன்று நடைபெறுவதாக இருந்த முழு கடையடைப்பு போராட்டம், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் அறிவுறுத்தலால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக, அம்மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. பொறுத்திருப்போம். திறனற்ற திமுக ஆட்சியில் தீவிரவாதிகளின் சதியால் கோவையில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலைக் கண்டித்து, கோவை மாநகர மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் 31.10.22 அன்று முழு கடையடைப்பு நடத்துவதென்று தீர்மானித்து 26.10.22 அன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தோம்.
கடந்த செவ்வாய்க்கிழமை 25.10.22 அன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, கோவை வெடிகுண்டு வழக்கை தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரிக்க வேண்டும் என்று சட்டப்பூர்வமான ஆலோசனைகளும் வழங்கினார். அதுவரை உறக்க நிலையில் இருந்த காவல்துறையும், முதல்வரும் அதன் பின்னரே செயல்பட தொடங்கினர். தீவிரவாதிகள் மீது முதல்கட்டமாக தீவிரவாத செயல்களைத் தடுக்கும் UAPA சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செயய்ப்பட்டது.
மாநில தலைவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக 27.10.22 அன்று உத்தரவிட்டு உடனடியாக விசாரணையை முழுவீச்சில் தொடங்கியுள்ளது.
இந்த சூழ்நிலையில், கோவை மாநகர வியாபாரிகளும், தொழிலதிபர்களும், தொழில்முனைவோர்களும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தொடர்பு கொண்டு தற்போதைய பொருளாதார நிலையைக் கணக்கில் கொண்டு கடையடைப்பை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்கள். அதன்படி மாநில தலைவர் இன்று என்னுடனும், தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மற்றும் முக்கிய தலைவர்களுடனும் உரையாடி கோயம்புத்தூர் மாநகர் மக்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
அதன்படி, பாஜக மாநிலத் தலைவரின் அறிவுறுத்தலை ஏற்று கோவை மாநகரில் 31.10.2022 அன்று நடைபெற இருந்த இந்த கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்தக் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு நல்கி ஆலோசனை வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். காத்திருப்போம் பொறுத்திருப்போம்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT