Published : 29 Oct 2022 06:35 AM
Last Updated : 29 Oct 2022 06:35 AM
சென்னை: சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. மேயர் ஆர்.பிரியா தலைமையில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை மேயர் மு.மகேஷ்குமார் ஆகியோர்முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மொத்தம் 70 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகராட்சி சார்பில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியின் கீழ் கொசஸ்தலை ஆறு வடிநிலப் பகுதியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் ரூ.3,220கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் மாநகராட்சி பங்களிப்பு தொகையான ரூ.750 கோடி நிதி தேவையை தமிழக அரசின் டுஃபிட்கோ (TUFIDCO) நிறுவனத்திடம் இருந்து கடனாகப் பெற மன்றத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
மேலும் ரூ.429 கோடியில் ராயபுரம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் புதிதாக 516 கழிப்பறைகள் கட்டவும், 68 சிறுநீர் கழிப்பிடங்கள், 69 குளியலறைகள் கட்டவும், பல்வேறு இடங்களில் கழிப்பிடங்களை பழுது பார்க்கவும், குறிப்பாக பொதுமக்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்அதிகம் வந்து செல்லும் மெரினா கடற்கரையில் கூடுதலாக கழிப்பறைகள் கட்டவும், ஏற்கெனவே உள்ள கழிப்பறைகளை பராமரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கும் மன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அம்பத்தூர் பாடியில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மையத்தில் மெட்ராஸ் எஸ்பிளனேடு ரோட்டரி சங்கம் மூலமாக மகளிர் புற்றுநோய் பரிசோதனை மையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் நடைபாதை கடைக்காரர்களுக்கான அடையாள அட்டைகளை கவுன்சிலர்கள் மூலமாகக் கொடுக்க வேண்டும். அம்மா உணவக ஊழியர் வருகைப் பதிவேட்டைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரினர். அதற்கு பதில் அளித்த மேயர்பிரியா, கவுன்சிலர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார். பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் பேசும்போது, சென்னையில் மழைநீர் வடிகால்பணிகளைத் துரிதமாக மேற்கொண்டதற்காக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர், ஆணையர் ஆகியோரை பாராட்டினார். அவர் கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசியதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த அவர், 'நான் இந்தியில் பேசவில்லை. ஆங்கிலத்தில் தான் பேசுகிறேன்' என்றார். மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேசும்போது, மழைக் காலம் தொடங்குவதால் புதிய மழைநீர் வடிகால் பணிகளைத் தொடங்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT