Published : 28 Oct 2022 06:23 PM
Last Updated : 28 Oct 2022 06:23 PM

தி.மலை தீபத் திருவிழாவுக்கு 40 லட்சம் பக்தர்கள் வர வாய்ப்பு: ஆட்சியர் பா.முருகேஷ்

கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் ஆட்சியர் பா.முருகேஷ்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 40 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நவம்பர் 24-ம் தேதி தொடங்குகிறது. பின்னர் பிடாரி அம்மன், விநாயகர் உற்சவம் நடைபெற உள்ளன. இதன்பிறகு, அண்ணாமலையார் கோயில் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடி மரத்தில், நவம்பர் 27-ம் தேதி காலை கொடியேற்றப்பட்டதும், பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் (மாட வீதி உலா) ஆரம்பமாகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளாக, டிசம்பர் 3-ம் தேதி மகா தேரோட்டம் (5 தேர்கள் பவனி) மற்றும் டிசம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளன.

முருகர் தேர் வெள்ளோட்டம்: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று (28-ம் தேதி) நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வசித்தார். அப்போது அவர் பேசும்போது, ''கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 40 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்ற வகையில், அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். தீபத் திருநாளில் ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

கோயில் வளாகம் மற்றும் கிரிவல பாதையில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். 2 ஆண்டுகளாக 5 தேர்களும் இயக்கப்படவில்லை. பெல் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மூலம் 5 தேர்களையும் 2 முறை ஆய்வு செய்து சான்று வழங்க வேண்டும். புதிதாக அமைக்கப்பட்டு வரும் முருகர் தேரை வெள்ளோட்டம் பார்க்க வேண்டும். பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசன கட்டண டிக்கெட் விற்பனை குறித்து கோயில் இணையதளத்தல் தெரிவிக்க வேண்டும்.

கால்நடை சந்தைக்கு முன்பதிவு: தீபத் திருநாளன்று திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர் வாகனங்கள் வருவதற்கு அனுமதி இல்லை. கிரிவல பாதையில் இரு சக்கர வாகனத்தை கூட இயக்கக்கூடாது. அரசு கலைக் கல்லூரி அருகே நடைபெறும் கால்நடை சந்திக்கு 4 ஆயிரம் மாடுகள், குதிரைகள் வரக்கூடும். கால்நடைகளை கொண்டு வருவதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். மாட வீதி மற்றும் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்ற வேண்டும்.

பெயரளவில் இல்லாமல் மருத்துவ முகாம்களை செயல்படுத்த வேண்டும். கடந்த கால அனுபவங்கள் மூலமாக, பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளை மனதில் கொண்டு புதிய வழிமுறையை உருவாக்க வேண்டும். கிரிவல பாதையில் பழுதடைந்துள்ள கழிப்பறைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். கோயிலில் உள்ள கழிப்பறைகளையும், திருப்பதிக்கு நிகராக சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நகரம் மற்றும் கிரிவல பாதையில் கூடுதல் எண்ணிக்கையில் குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் மூலம் உடனுக்குடன் குப்பைகளை அகற்ற வேண்டும்.

2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி: தீபத் திருவிழாவுக்கு 52 இடங்களில் அன்னதானம் வழங்கலாம். இதற்கான இடத்தை தேர்வு செய்து, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுபடி, தீபத் திருநாளில் அண்ணாமலை மீது ஏறுவதற்கு 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இவர்களுக்கு, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில், அன்றைய தினம் காலை 6 மணி முதல் 7 மணி வரை அனுமதி சீட்டு வழங்கப்படும். கண்காணிப்பு கேமரா, கட்டுப்பாட்டு அறைகளை அமைக்க வேண்டும். தீயணைப்புத் துறையினர், வனத்துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். கிரிவல பாதையில் உள்ள குளங்கள் தூர்வாரப்படாமல் உள்ளன. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 2,700 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சிறப்பு ரயில் இயக்குவது குறித்து பரிந்துரைக்கப்படும்'' என்றார்.

ஆலோசனைக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெற்றிவேல், அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x