Published : 28 Oct 2022 05:50 PM
Last Updated : 28 Oct 2022 05:50 PM
சென்னை: கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது காதலித்து இன்று (அக்.28) திருமணம் செய்துகொண்ட காதல் தம்பதியினர், மருத்துவமனையில் சேவை செய்ய விரும்பியதின் அடிப்படையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவர்களுக்கு பணி ஆணை வழங்கினார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேந்திரன் மற்றும் தீபா ஆகியோரின் காதல் திருமணம் இன்று மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கோயிலில் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்துகொண்டு மாங்கல்யத்தை எடுத்துக்கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், "நான் இதுவரை கலந்து கொண்டதிலேயே நறிக்குறவர் திருமணத்தில் கலந்துகொண்டதுதான் மறக்க முடியாதது. அதற்கு அடுத்ததாக இந்த திருமணத்தை என்னால் மறக்க முடியாது. இது எனக்கு கிடைத்த பாக்கியம். இவர்கள் திருமணம் குறித்து கேள்விப்பட்டதுடன், அவர்கள் முழுவதும் குணமடைந்து உள்ளார்களா , உறவினர்கள் சம்மதம் தெரிவித்தார்களா என்று கேட்டுக் கொண்டேன். அனைத்து சட்ட விதிகளும் இந்தத் திருமணத்தில் பின்பற்றப்பட்டு உள்ளது. நான் இந்தத் திருமணத்தில் அழையா விருந்தாளியாக வந்துள்ளேன்.
நிரந்தர வருமானம் இருந்தால் இவர்கள் வாழ்வு இன்னும் சிறக்கும் என்று சட்டமன்ற உறுப்பினர் வெற்றிஅழகன் கோரிக்கை வைத்தார். ஆனால், அவர்கள் வெளியில் சென்று வேலை செய்வதை விட இங்கு இருந்து இங்கு உள்ளவர்களுக்கு சேவை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். அதனால், இவர்கள் இருவருக்கும் இங்கேயே வார்டு மேற்பார்வையாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. பணி நியமன ஆணையை கல்யாண பரிசாக பரிசாக வழங்குகிறேன்" என்று அமைச்சர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT