Last Updated : 28 Oct, 2022 05:02 PM

 

Published : 28 Oct 2022 05:02 PM
Last Updated : 28 Oct 2022 05:02 PM

தேவர் குருபூஜை | பாதுகாப்பு பணியில் 10,000 பேர்; 14 ட்ரோன்களில் கண்காணிப்பு - டிஜிபி சைலேந்திர பாபு தகவல்

பசும்பொன்னில் அமைக்கப்பட்டுள்ள காவல் கட்டுப்பாட்டு அறை அருகே ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டு ஆய்வு செய்த டிஜிபி சைலேந்திர பாபு.

ராமநாதபுரம்: பசும்பொன் தேவர் குருபூஜை விழா பாதுகாப்பு பணிகளில் தென்மண்டல ஐஜி தலைமையில் 10,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பாதுகாப்பை கண்காணிக்க முதன்முறையாக 14 உயர்தர ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழா 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேவரின் குருபூஜை விழா இன்று காலை 10.25 மணியளவில் லட்சார்ச்சனை பெருவிழாவுடன் தொடங்கியது. இன்றே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தேவர் நினைவாலயத்தில் மரியாதை செலுத்தினர். அக்டோபர் 30 குருபூஜை அன்று முதல்வர் மு.க. ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்நிலையில், பசும்பொன்னில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், ராமநாதபுரம் சரக டிஐஜி மயில்வாகனன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். மேலும், அங்குள்ள காவல் கட்டுப்பாட்டு அறை அருகே உயர்தர ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டும் டிஜிபி ஆய்வு செய்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் டிஜிபி கூறும்போது, ''தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 4 டிஐஜிக்கள், 34 காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பசும்பொன்னில் மட்டும் ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த முறை முதன்முறையாக 14 உயர்தர ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் 95 சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஊரில் இருந்து அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். பசும்பொன் காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனைத்துப் பகுதிகளையும் கண்காணிக்க முடியும். சென்னையில் இருந்து கொண்டே பசும்பொன் காவல் கட்டுப்பாட்டு அறை பணியை என்னால் காணமுடியும். பாதுகாப்புக்கு வந்துள்ள போலீஸாருக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது'' என டிஜிபி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x