Published : 28 Oct 2022 11:29 AM
Last Updated : 28 Oct 2022 11:29 AM
நாமக்கல்: கேரளாவில் மீண்டும் பறவைக்காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழக கோழிப்பண்ணையாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் அடிக்கடி பறவைக்காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. பறவைக் காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்படும் போது ஆயிரக்கணக்கான கோழிகள் அழிக்கப்படுவதுடன், கோழி மற்றும் முட்டை விற்பனை வீழ்ச்சியடைந்து கோழிப் பண்ணையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த வாரம் 1,500 வாத்துகள் பறவைக் காய்ச்சல் பாதிப்பால் இறந்துள்ளன.
ஆலப்புழா மாவட்டம், ஹரிப்பாட் நகராட்சிக்கு உட்பட்ட வாழுத்தனம் பகுதியில் எச்5 என்1 பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹரிப்பாட் நகராட்சி 9வது வார்டுக்கு உட்பட்ட வாழுத்தனம் மற்றும் வடக்கே பேரடி பகுதிகளில் 20 ஆயிரம் வாத்துகளை வளர்த்து வரும், 2 பண்ணைகளில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட வாத்துகள் பறவைக்காய்ச்சலால் திடீரென இறந்துள்ளன.
ஏராளமான வாத்துக்கள் இறந்ததால் கால்நடை பராமரிப்புத்துறை, இறந்த வாத்துக்களின் மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கின நோய் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன் பரிசோதனை முடிவில் பறவைக்காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆலப்புழா மாவட்டம் வாழுத்தனம் நகராட்சிப் பகுதியில் எச்5 என்1 வைரஸ், வாத்துக்களை தாக்கியுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண தேஜா அறிவித்துள்ளார்.
ஆட்சியர் உத்தரவின்பேரில், அப்பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறவிக்கப்பட்டு, அங்கிருந்து பறவைக்காய்ச்சல் வேறு இடங்களுக்கு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள பகுதியைச் சுற்றிலும் வளர்க்கப்படும் 20,471 வாத்துக்கள் உள்ளிட்ட கோழிகள் மற்றும் பறவைகள் கொல்லப்படுகின்றன.
நோய் பாதிக்கப்பட்ட பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 8 அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டு அப்பகுதியில் இருந்து வெளி இடங்களுக்கு வாத்து மற்றும் கோழி உள்ளிட்ட பறவை இனங்கள் எடுத்துச்செல்லாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஹரிப்பாட் நகராட்சி மற்றும் பள்ளிப்பாட் கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தின் உதவியுடன் கொல்லப்படும் வாத்துக்கள் மற்றும் கோழிகள் முறைப்படி அப்புறப்படுத்தப்படுகின்றன.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக்காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டதால், தமிழகத்தில் உள்ள கோழிப் பண்ணையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் சுமார் 5 கோடிமுட்டையினக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இங்கிருந்து தினசரி கோடிக்கனக்கான முட்டைகள் மற்றும் கோழிகள் விற்பனைக்காக கேரள மாநிலத்திற்கு, லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. கேரளாவில் உறுதி செய்யப்பட்டுள்ள பறவைக்காய்ச்சலால் தமிழகத்தில் கோழிப்பண்ணைத் தொழிலில் பாதிப்பு ஏற்படுமா என கோழிப்பண்ணையாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT