Published : 26 Nov 2016 10:04 AM
Last Updated : 26 Nov 2016 10:04 AM

உள்ளாட்சி 50: பஞ்சாயத்து ராஜ்ஜியம் நடத்தும் கல்வி சாம்ராஜ்யம்!

தனி நபர் கல்விக்கு 2,792 ரூபாய்... கழிப்பறைகள் 99.7%, குடிநீர் 99 % நிறைவேற்றம்...

ஓர் அரசு எத்தனையோ முன்மாதிரி திட்டங்களைச் செயல்படுத்தலாம். ஆனால், கல்வி மற்றும் மருத் துவம் இவை இரண்டையும் அது எப்படி கையாள்கிறது என்பதை வைத்து தான் அந்த அரசின் மாண்புகள் மதிப் பிடப்படும். கேரள அரசின் மருத்துவத் திட்டத்தைப் பற்றி ஏற்கெனவே பார்த்துவிட்டோம். சரி, கேரளத்தில் பஞ்சாயத்துகள் மூலம் பள்ளிக் கல்வி எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப் புகள் வசமிருந்த அரசுப் பள்ளிகள் மாநில அரசிடம் சென்றுவிட்டன. அவற்றின் இன்றைய நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ‘அரசுப் பள்ளிகள் மீண்டும் உள்ளாட்சிகளிடமே ஒப்படைக்கப்பட வேண்டும்’ என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், ஆசிரியர்களில் ஒருசாரார் ‘ஒப்படைக்கக்கூடாது’ என்கின்றனர். சமீபகாலமாக இந்த விவாதம் வலுத்துவருகிறது. எனவே, இதன் பின்னணியில் இருந்து இந்தக் கட்டுரையை அணுகுவது பொருத்தமாக இருக்கும்.

கேரளத்தில் 1989-91-ல் கேரளத்தின் 14 மாவட்டங்களில் ‘கல்வி மற்றும் பயிற்சி மாவட்ட மையங்கள்’ (District Institute of Education and Training - DIET) திட்டம் செயல்படுத்தப்பட்டது. பின்பு 93-ல் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் திட்டம் உருவாக் கப்பட்டது. பின்பு உலக வங்கி நிதி உதவியுடன் மாவட்ட தொடக்கக் கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது. பேராசிரியர் யஸ்பால் குழு உள்ளிட்ட குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் குழந்தைகளுக்கு செயல்வழி கற்றல் முறையிலான சுமையில்லாத திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தக் காலகட்டத்தில்தான் கேரளத் தில் பஞ்சாயத்து ராஜ்ஜியம் சட்டம் இயற்றப்பட்டு பஞ்சாயத்து ராஜ்ஜி யங்கள் உருவாகின. முதல்வேலையாக மாநில அரசுப் பள்ளிக் கல்வியை உள் ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைத்தது.

ப்ரிகேஜி முதல் 4-ம் வகுப்பு வரையிலான கீழ்நிலை தொடக்கப் பள்ளிகள், 7-ம் வகுப்பு வரையிலான மேல்நிலை தொடக்கப் பள்ளிகள் கிராமப் பஞ்சாயத்துக்கள் வசம் ஒப்ப டைக்கப்பட்டன. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் நேரடியாக பஞ்சாயத்துக்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தை நிர்வகிப்பது, அரசு தொழில் பயிற்சி மையங்களை நடத்துவது ஆகியவை பஞ்சாயத்து ஒன்றியங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. போன்ற தொழில் நுட்ப, தொழில்கல்வி மையங்கள், பல்கலைக்கழக கல்வி மையங்கள், ஒருங்கிணைந்த கல்வி திட்டங்களை நிர்வகிப்பது ஆகியவை மாவட்ட பஞ்சாயத்துகள் வசம் ஒப்படைக்கப் பட்டன.

சமீபத்தைய ஆண்டுகளில் பஞ்சாயத் துப் பள்ளிகளில் விவசாயக் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மாண வர்களுக்கு இயற்கை விவசாயம், இயற்கை உரம் உற்பத்தி, காய்கறிகள் சாகுபடி, தேனீ வளர்ப்பு, தச்சுத் தொழில், நவீன மண்பாண்டங்கள் செய்வது, கயிறு உற்பத்தி, இயற்கை சாயமிடுதல் இவற்றை கற்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பஞ்சாயத்துப் பள்ளிகளிலும் காலை, மதியம் உணவு, மாலை முட்டை, பால், வாழைப் பழம், வாரம் ஒருமுறையேனும் அசைவம் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கிராமப் பஞ்சாயத்து தொடங்கி மாவட்டப் பஞ்சாயத்துகள் வரை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அனைவருமே உள்ளாட்சி நிர்வாகத் துக்கு கட்டுப்பட்டவர்கள். ஆசிரியர் களுக்கு மாநில அரசின் கல்வித் துறை ஊதியம் வழங்குகிறது. அங்கன்வாடி பணியாளர், சுகாதாரப் பணியாளர் போன்றவர்களுக்கு பஞ்சாயத்து நிர்வாகம் ஊதியம் வழங்குகிறது. ஆசிரியர்கள் வருகை, வகுப்பு எடுக்கும் முறைகள், கல்வியின் தரம், கட்டிடங்கள் பராமரிப்பு, உள்கட்டமைப்பு வசதிகள், கழிப்பறைகள், குழந்தைகள் விவசாயம் என அத்தனையும் பஞ்சாயத்து நிர்வாகமே நேரடியாக நிர்வகிக்கிறது.

ஒவ்வொரு வகுப்புக்கும் ஓர் ஆசிரியர் இருக்க வேண்டியது கட்டாயம். ஆசிரியர் குறித்த புகார்கள், கற்பித்தல் முறையில் பிரச்சினை, குழந்தைகள் மீதான வன்முறை, குழந்தைகளின் உணவு வழங்குவதில் பிரச்சினை இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க பஞ்சாயத்துக் கல்வி குழுவுக்கு பஞ்சாயத்துத் தலைவர் பரிந்துரைக்கிறார். அதன் அடிப்படையில் மூன்று ஊதிய உயர்வு வரை நிறுத்தி வைக்கிறார்கள். கெஸடட் அல்லாத அலுவலரை பஞ்சாயத்தின் கல்விக் குழு தற்காலிக பணிநீக்கம் செய்ய முடியும். கெஸடட் அலுவலரை தற்காலிக பணி நீக்கம் செய்ய கல்வித் துறையிடம் பரிந்துரைக்க இயலும்.

ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் தாங்கள் பணிபுரியும் பஞ்சாயத்தின் பதவி வழி உறுப்பினராவார் (Ex - officio member). ஒவ்வொரு மாதமும் நடக்கும் கிராம சபை கூட்டங்களில் அவர்கள் கலந்துக்கொள்ள வேண்டியது கட்டாயம். தங்கள் பள்ளிக்கு என்ன தேவை என்பதை, ஒவ்வொரு மாதமும் இவர்கள் அறிக்கையாக கிராம சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கிராமப் பஞ்சாயத்து மற்றும் ஒன்றியப் பஞ்சாயத்துக்களில் இந்த அறிக்கைகளை கல்வி மற்றும் சுகாதாரக் குழு, மக்கள் நலக் குழு ஆகியவை பரிசீலித்து ஒப்புதல் அளிக்கும். தவிர, தொழில்நுட்ப ஆலோசனைக் குழுக்கள், பெற்றோர் - ஆசிரியர்கள் கழகம், பள்ளிக் கல்வி ஆதரவுக் குழுக்கள் ஆகியவையும் நிர்வாகத்தில் உதவியாக இருக்கும்.

ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்தின் கல்வி மற்றும் சுகாதாரக் குழுவிடமும் அந்தக் கிராமப் பஞ்சாயத்து பள்ளி யில் படிக்கும் ஒவ்வொரு மாணவரின் விவரங்கள் அடங்கிய கோப்புகள் இருக்க வேண்டும். அவை கணினி யிலும் பதிவு செய்யப்பட வேண்டும். இதில் மாணவரின் கல்வித் திறன், தொழில்நுட்ப மற்றும் தனித் திறமைகள், குடும்பத்தினர் எண்ணிக்கை, குடும் பத்தின் வருமானம், வருவாய் ஆதாரம், குடும்பச் சூழல், குடும்ப உறுப்பினர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால் அதுதொடர்பான விவரம் ஆகியவை அடங்கியிருக்கும். பெற்றோர் - ஆசிரியர் கழகங்கள் மூலம் தலைமை ஆசிரியர்கள் இவற்றை சேகரித்து பதிவு செய்கிறார்கள்.

ஒவ்வோர் ஆண்டும் கிராம, ஒன்றிய, மாவட்டப் பஞ்சாயத்துகளில் கல்வி மற்றும் சுகாதாரக் குழு மூலம் ‘பஞ்சாயத்து கல்வி வளர்ச்சி அறிக்கை’ தயாரிக்கப்பட்டு மாநில அரசின் கல்வித் துறைக்கு அனுப்பப்பட வேண்டும். இதில் மாணவர் - ஆசிரியர் எண்ணிக்கை, விகிதாச்சாரம், வகுப்பறைகள், கழிப்பிடங்கள், மைதா னங்கள் ஆகிய உள்கட்டமைப்பு விவரங்கள், விளையாட்டு உபகர ணங்கள், அறிவியல் பரிசோதனைக் கூட உபகரணங்கள், கணினிகள் எண்ணிக்கை / தேவை, பள்ளிச் செல்லும், செல்லாத, இடைநின்ற மாணவர்கள் விவரங்கள், தேர்ச்சி விகிதம் ஆகியவை இடம்பெற வேண்டும்.

இதன் அடிப்படையிலேயே பஞ்சாயத்துப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவை தவிர, மாநில அளவில் நடக்கும் ‘சாஸ் த்ரோசவம்’ நிகழ்ச்சியின் அறிவியல் கண்காட்சி, கணக்கு கண்காட்சி, சமூக அறிவியல் கண்காட்சி, கள அனுபவக் கண்காட்சி, தகவல் தொழில்நுட்பக் கண்காட்சி ஆகியவற்றுக்கு மாணவர்களைத் தேர்வு செய்வதும் மேற்கண்ட குழுக்களின் பொறுப்பாகும்.

கேரள அரசு ஒவ்வோர் ஆண்டும் தனது மொத்த செலவில் சராசரியாக 40 சதவீதம் நிதியை கல்விக்காக ஒதுக் குகிறது. சராசரியாக நபர் ஒருவருக்கு கல்விக்காக ரூ.2,792 செலவிடுகிறது. கேரளத்தில் 4,620 அரசுப் பள்ளிகளும், 7,161 அரசு உதவிபெறும் பள்ளிகளும் இருக்கின்றன. தனியார்கள் பள்ளிகள் 863 மட்டுமே. 45 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருக்கிறார். இதனை 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியராக குறைக்க பரிசீலித்துவருகிறது

அரசு. மத்திய திட்டக் குழு அளித்துள்ள அறிக்கையின்படி கேரளத்தின் 99 சதவீத அரசுப் பள்ளிகள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி பெறுகின்றன. 99.7 சதவீத அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகள் இருக்கின்றன. கேரளத்தில் பள்ளிகளில் இடைநிற்கும் குழந்தைகள் 0.53 சதவீதம் மட்டுமே. நாட்டிலேயே மிகக் குறைந்த விகிதம் இதுதான்.

மேற்கண்ட புள்ளிவிவரங்களுடன் தமிழகத்தின் புள்ளிவிவரங்களை ஒப்பிட விரும்பவில்லை. கேரளத்தில் பஞ்சாயத்து ராஜ்ஜியம் என்னும் எளிய மக்கள் அதிகாரத்துக்குக் கிடைத்த வெற்றி இது!

இப்போது சொல்லுங்கள், தமிழ கத்தில் அரசுப் பள்ளிகளை உள்ளாட்சி களிடம் ஒப்படைக்கலாமா? வேண்டாமா?

- பயணம் தொடரும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x