Published : 28 Oct 2022 09:00 AM
Last Updated : 28 Oct 2022 09:00 AM

தமிழக அரசின் ஊரக திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படுமா?

திருச்சி: தமிழக அரசு சார்பில் கிராமப்புற மாணவர்களுக்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் ஊரக திறனாய்வுத் தேர்வில் (டிரஸ்ட்) தேர்ச்சி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கல்வியாளர்கள், பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஏழை, எளிய மாணவ, மாணவிகளை தொடர்ந்து கல்வி கற்க ஊக்விக்கும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திறனறித்தேர்வுகளை நடத்தி வருகின்றன. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தமிழக அரசு கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் 2022-23-ம் ஆண்டுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வை (டிரஸ்ட்) நடத்த அரசு தேர்வுகள் இயக்ககம் 21.10.2022 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேர்வை ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்புபயிலும் மாணவ, மாணவிகள் எழுதலாம். தேர்வு எழுதும் மாணவரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோரில் மாவட்டந்தோறும் 50 மாணவர்கள், 50 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு (9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் வரை) ரூ.4 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என பெற்றோர்கள், கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து, கல்வியாளரும், காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன ஓய்வுபெற்ற முதல்வருமான சி.சிவக்குமார் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: ஊரக திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சிபெறுபவர்களில் மாவட்டத்துக்கு 100 பேருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதை மாணவர்கள் 100, மாணவிகள் 100 என ஒரு மாவட்டத்துக்கு 200 பேருக்கு வழங்க வேண்டும். மேலும், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகள் ஆண்டுக்கு ரூ.1,000 என 4 ஆண்டுகளுக்கு ரூ.4,000 மட்டுமே பெறுகின்றனர்.

ஆனால், மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதத்துக்கு ரூ.1,000 என 4 ஆண்டுகளுக்கு ரூ.48 ஆயிரம்கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனவே, ஊரக திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதல்கட்டமாக தமிழக அரசு மாதம் ரூ.500 என உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் வழங்கும் இந்த கல்வி உதவித்தொகைகள் அந்த மாணவர்களுக்கு கல்வியைதொடர்ந்து கற்க ஊக்கப்படுத்துவதற்காகத் தான் என்பதைகவனத்தில் கொண்டு, பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வருவதும் அவசியமானது.

மத்திய, மாநில அரசுகள் நடத்தும் கல்வி உதவித் தொகைக்கான திறனறித் தேர்வுகளை எழுத, மாணவர்களுக்கு தமிழில் உரிய பயிற்சி கையேடுகள் வழங்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்ததை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x