Published : 28 Oct 2022 06:03 AM
Last Updated : 28 Oct 2022 06:03 AM

தமிழகத்தில் புதிய மனைப் பிரிவுகளுக்கு அனுமதி - நகராட்சி நிர்வாக துறையின் திருத்திய நடைமுறைகள் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் புதிய மனைப் பிரிவுகளுக்கு அனுமதியளிப்பதில் திருத்திய நடைமுறைகளை நகராட்சி நிர்வாகத் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கை:

அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் புதிதாக அனுமதிக்கப்படும் மனைப் பிரிவுகளில் ஏற்படுத்தப்பட வேண்டிய அடிப்படைகட்டமைப்பு வசதிகள், கட்டமைப்புவசதிகளின் தரம், மதிப்பீடு தயாரித்தல் மற்றும் அபிவிருத்தியாளரால் மேற்கொள்ள அனுமதிக்கக்கூடிய பணிகள் குறித்து பரிந்துரைத்தல், பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநரால் குழு அமைக்கப்பட்டது.

இக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, மனைப்பிரிவு அனுமதிக்கான விண்ணப்பங்கள் விண்ணப்பதாரர், உரிமையாளரால் நேரடியாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ)அல்லது நகர ஊரமைப்புத் துறைக்கு (டிடிசிபி) சமர்ப்பிக்க வேண்டும்.

சிஎம்டிஏ அல்லது டிடிசிபியால், உத்தேச மனைப்பிரிவுக்கான இடம் ஆய்வு செய்யப்பட்டு, ஆவணங்கள் சரிபார்க்கப்பட வேண்டும். அதன்பின், மனைப்பிரிவு வரைபடத்தில் உள்ள சாலைகள், பூங்கா, திறந்தவெளி ஒதுக்கீடு இடங்களைசம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளின் பெயரில் மனைப்பிரிவு உரிமையாளரால் பதிவு செய்யப்பட்ட தானப்பத்திரம் மூலம் சிஎம்டிஏ அல்லது டிடிசிபியால் பெறப்படும்.

சிஎம்டிஏ அல்லது டிடிசிபியால் மனைப்பிரிவுக்கு தொழில்நுட்ப ஒப்புதல் அளிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட தானப்பத்திரத்துடன் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிக்கு அனுப்பிவைக்கப்படும். அந்த மனைப்பிரிவில் உள்ள சாலைகள், பூங்காக்கள், திறந்தவெளி ஒதுக்கீடு இடங்கள் ஆகியவை தானப்பத்திரப்படி உள்ளதா என்பதை சரிபார்த்தபின், தான சொத்துகளை உள்ளாட்சி பராமரிப்புக்கு ஒப்புதல் பெற நகர்மன்ற ஒப்புதல் பெற வேண்டும்.

மனைப்பிரிவுக்கான சாலை, மழைநீர் வடிகால், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான பணிகளை உள்ளாட்சிகள் செய்ய, மதிப்பீடு தயாரித்து, மனைப்பிரிவு ஒப்புதலுக்கான இதரகட்டணங்களைச் செலுத்தக் கோரி விண்ணப்பதாரருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பதாரரே அடிப்படை வசதிகளைச் செய்ய விரும்பினால், வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செய்ய அனுமதிக்கலாம். இப்பணிகளை அருகில் உள்ள பொறியியல் கல்லூரி வாயிலாக ஆய்வுசெய்ய வேண்டும். விண்ணப்பதாரர்மேற்கொள்ளும் பணிகளைத் தவிர்த்து, இதர பணிகளுக்கான மதிப்பீட்டுக் கட்டணம் உள்ளாட்சிகளால் வசூலிக்கப்பட வேண்டும்.

மனுதாரர் ஏற்படுத்திய அடிப்படை வசதிகளை 5 ஆண்டுகள் அல்லது 60 சதவீத மனைகள் அபிவிருத்தி அடைதல் இவற்றில் எதுஅதிக காலமோ அப்போது வரை விண்ணப்பதாரர் பராமரிக்க வேண்டும். அடிப்படை வசதிகள் கட்டணம், மனைப்பிரிவு ஒப்புதலுக்கான இதரகட்டணங்கள் செலுத்தியதைச் சரிபார்த்தபின், நில அளவை ஆவணங்களில் உட்பிரிவு செய்து, சிஎம்டிஏ, டிடிசிபியால் வழங்கப்பட்டுள்ள உத்தரவின் அடிப்படையில் மனை பிரிவுக்கான இறுதி உத்தரவுவழங்கப்பட வேண்டும். மனைப்பிரிவு, உட்பிரிவு சம்பந்தமான பணிகள் இணையதளம் வாயிலாகவே மேற்கொள்ளப்படவேண்டும்.

அடிப்படை வசதிகளுக்கான முழு தொகையையும் மனுதாரர் செலுத்தும் நிலையில், நகர ஊரமைப்பு துறையிடம் இருந்து உத்தரவு பெறப்பட்ட 30 நாட்களுக்குள்ளும், மனுதாரர் அடிப்படை வசதிகளைச் செய்யும் நிலையில், 60 நாட்களுக்குள்ளும் இறுதி ஒப்புதல் வழங்கப்பட வேண்டும்.

இந்தச் சுற்றறிக்கையின்படி, எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல், மாநகராட்சி ஆணையர்கள், நகராட்சி ஆணையர்கள், பொறியாளர்கள் மனைப்பிரிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x