Published : 19 Nov 2016 02:40 PM
Last Updated : 19 Nov 2016 02:40 PM

மதுரை: அங்கன்வாடியில் குளிர்பானம் என நினைத்து ஆசிட் குடித்த 3 வயது குழந்தை

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே வெள்ளயம் பட்டியை சேர்ந்தவர் சின்ன முனியாண்டி (35). இவரது மனைவி வளர்மதி (34). இவர்களுக்கு சுபஸ்ரீ(10), வருனேஷ் (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சுபஸ்ரீ, அங்குள்ள அரசு பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கிறார்.

இப்பள்ளி அருகே ஒரு அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு 15 குழந்தைகள் படிக்கின்றனர். இங்கு வருனேஷையும், சில மாதங்களுக்கு முன் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 12-ம் தேதி வழக்கம்போல் காலை சுபஸ்ரீ, தம்பியை அங்கன்வாடியில் கொண்டு போய்விட்டுள்ளார். சிறிது நேரத்தில் வருனேஷ் வாயில் இருந்து நுரை தள்ளியபடி கை, கால் இழுத்துக் கொண்டு கீழே விழுந்தார். பதறிப்போன வளர்மதி முடுவார்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு முடியாது என்ற தால், மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தை ஆசிட் குடித்தது தெரிய வந்தது.அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், வருனேஷ் பெற்றோரிடம் ஆசிட்டை எப்படி குடித்தான் எனக் கேட்டுள்ளனர். அவர்கள் எங்கள் வீட்டில் ஆசிட்டே வாங்க மாட்டோம், பால்வாடிக்கு போன குழந்தை இப்படி ஆகிவிட்டான் என்று தெரிவித்துள்ளனர். நுரையீரல், உணவுக் குழாய் பாதிக்கப்பட்டதால் ஆபத்தான நிலையில் குழந்தை இருக்கிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரிகள் அங்கன்வாடி மையத்தில் விசாரித்தனர். அங்கன்வாடி பணியாளர் கவுசல்யா, எங்களுக்கு எதுவும் தெரியாது என கடந்த 5 நாட்களாக தொடர்ந்து மழுப்பி வந்தார்.

நேற்று முன்தினம் போலீஸாரை அழைத்து சென்றுவிசாரித்தனர். அதனால், உண்மையை மறைக்க முடியாமல் கவுசல்யா, ‘‘கழிப்பறையை சுத்தம் செய்ய வீட்டிலிருந்த ஆசிட்டை குளிர்பான டப்பாவில் எடுத்துவந்தேன்.

அதை குளிர்பானம் என நினைத்து குழந்தை குடித்து விட்டது. வெளியே சொன்னால் பிரச்சினையாகிவிடும் என மறைத்துவிட்டோம், ’’ என்றதாக கூறப்படுகிறது. மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பாண்டியம்மாளிடம் கேட்டபோது, ஆட்சியர் விசாரணை நடத்துகிறார். நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்

அவங்க பிள்ளையா இருந்தா இப்படி செய்வாங்களா?

வளர்மதி கூறுகையில், ஒரு வாரமாக எம்புள்ள என்ன குடிச்சான், ஏன் இப்படியானானு தெரியாம உசுர கையில பிடிச்சிட்டு இருந்தோம். 8 மணிக்கு பால்வாடிக்கு நல்லா அனுப்பின குழந்தை மூச்சு பேச்சில்லாம வந்தா எப்படியிருக்கும். பால்வாடி டீச்சர் கவுசல்யாவிடம் கேட்டால், அவங்க, ‘‘ஏம்புள்ள நான் போய் உனக்கு துரோகம் பன்னுவேனா, எனக்கு தெரிஞ்சா சொல்லமாட்டேனா, ’’ என்றார். நேற்றுதான்(நேற்று முன்தினம்) போலீஸ்காரங்க போய் கேட்டதும், பையன் ஆசிட் குடிச்சத ஒப்புக்கிட்டாங்க. அவங்க புள்ளையா இருந்தா இப்படி அசால்ட்டா இருந்திருப்பாங்களா, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x