Published : 28 Oct 2022 06:28 AM
Last Updated : 28 Oct 2022 06:28 AM

திருச்செந்தூர் கோயிலில் நடப்பதுபோல் வேறு எங்கும் ஊழல் இல்லை: உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

மதுரை: திருச்செந்தூர் கோயிலில் நடப்பதுபோல் வேறு எந்தக் கோயிலிலும் ஊழல் இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்ட பாஜக செயலாளர் சித்ரங்கநாதன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் கந்த சஷ்டி விழாவில், இந்தாண்டு, கோயில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி சஷ்டி விரதம் இருக்க கோயில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இங்கு காலம் காலமாக நடைபெற்று வரும் பழக்க வழக்கங்களை மாற்றுவதை ஏற்க முடியாது. கோயில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் தங்க அனுமதி தர உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இம்மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: திருச்செந்தூர் கோயிலின் உள் பிரகாரத்தில் சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் தங்கியிருக்க அனுமதிக்க முடியாது. கோயிலுக்குள் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி மறுத்தது சரியானது. கோயிலின் உள்ளே இருந்தால் மட்டும் அனைத்தும் சரியாகிவிடாது. உண்மையான பக்தியுடன் இருக்க வேண்டும். திருப்பதி கோயிலில் இதுபோன்று விரதம் இருக்க முடியுமா? தமிழக கோயில்கள் என்ன சத்திரமா?

திருச்செந்தூர் கோயிலில் பணம் கொடுத்தால் உடனடியாக சுவாமி தரிசனம் செய்ய முடியும். இந்த கோயிலில் நடைபெறுவதுபோல் வேறு எந்த கோயிலிலும் ஊழல் இல்லை. கோயில் பணக்காரர்களுக்கானது இல்லை. கடவுள் அனைவருக்கும் சமமானவர். இதனால் கோயில்களில் கடைபிடிக்கப்படும் தேவையற்ற நடைமுறைகளை ஒழிக்க வேண்டும்.

திருப்பதிபோல் கட்டுப்பாடு.. தமிழகக் கோயில்களைக் காப்பாற்ற புதிய வழிமுறைகளை வகுக்க வேண்டும். தவறினால் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க நேரிடும். திருச்செந்தூர், பழநி முருகன் கோயில்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் திருப்பதி கோயிலில் பின்பற்றப்படும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழகக் கோயில்களில் உள் பிரகாரங்களில் யாகங்கள் நடத்த அனுமதிக்கக் கூடாது. யாகங்கள் கோயிலுக்கு வெளியேதான் நடத்தப்பட வேண்டும். இதனை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஒரே மாதிரியான நடைமுறைகள், கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். திருச்செந்தூர் கோயிலில் பின்பற்றப்படும் நடைமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்து அறநிலையத் துறை ஆணையர் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை நவ.15-க்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x