Published : 28 Oct 2022 04:30 AM
Last Updated : 28 Oct 2022 04:30 AM
ராமேசுவரம்: ராமேசுவரம் தீவுக்கு வெளி மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ரேஸ் பைக்குகளில் இளைஞர்கள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர். பைக்குகளில் பாம்பன் பாலம், தனுஷ்கோடியில் சாலைகளில் சீறிப் பாய்ந்து சாகசப் பயிற்சியில் ஈடுபடுவதால் பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.
ராமேசுவரம் தீவில் மன்னார் வளைகுடா கடல், பாக் ஜலசந்தி கடல், மூன்று புறமும் கடல் சங்கமிக்கும் அரிச்சல்முனை, புயலால் அழிந்த தனுஷ்கோடி, பாம்பன் ரயில் மற்றும் சாலைப் பாலங்கள், ராமநாத சுவாமி கோயில், அப்துல் கலாம் நினைவிடம் போன்றவை சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்வதால் ஆண்டுதோறும் இங்கு சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
மேலும், ரேஸ் பைக்குகளில் வெளி மாநில மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் இளைஞர்கள் ராமேசுவரம் தீவுக்கு வந்து செல்கின்றனர். இந்த பைக் பிரியர்கள் பாம்பன் பாலம், ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்ப்பதோடு மட்டுமின்றி சாலைகளில் அதிவேகமாகச் சென்று சாகசத்தில் ஈடுபடுகின்றனர்.
பாம்பன் சாலைப் பாலம் மற்றும் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலைகளில் இந்த இளைஞர்கள் ரேஸ் பைக்குகளில் அதிவேகத்தில் சீறிப் பாய்ந்து செல்வது, எதிரே வரும் பொது மக்களையும் வாகன ஓட்டுநர்களையும் பதற வைக்கிறது.
இது குறித்து ராமேசுவரம் காவல்துறையினர் கூறியதாவது: ரேஸ் பைக்குகளில் தொலை தூரங்களுக்குச் செல்லும் மேற்கத்திய கலாச்சாரம் தற்போது நம் நாட்டிலும் பரவி வருகிறது. இந்த பைக்கர்கள் கூட்டமாகவோ அல்லது தனியாகவோ புறப்பட்டு கிராமங்கள், நகரங்கள், மாநகரங்களைக் கடந்து புகழ்பெற்ற சுற்றுலா தலங்களுக்கு வருகின்றனர். அவ்வாறு பைக்குகளில் பயணிப்பதை நவீன கேமராக்கள் மூலம் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்வது அதிகரித்து வருகிறது.
பாம்பன் சாலைப் பாலம், ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பைக்குகளில் அதி வேகத்தில் பயணிப்பது, சாலை விதிமுறைகளை மீறி பைக்குகளில் சாகசம் செய்தால் அபராதம் விதிப்பதுடன் மட்டுமின்றி, சிறைத் தண்டனையும் விதிக்கப்படும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT