Published : 28 Oct 2022 12:34 AM
Last Updated : 28 Oct 2022 12:34 AM
கோவை: கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய கார் வெடிப்பு வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ அதிகாரிகளான டிஐஜி வந்தனா, எஸ்.பி ஸ்ரீஜித் ஆகியோர், அடிப்படைவாத வழக்குகளை சிறப்பாக கையாண்ட அனுபவம் உள்ளவர்கள் ஆவார்.
கோவை கோட்டைமேட்டில் கடந்த 23-ம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வுப் பிரிவு எனப்படும் என்.ஐ.ஏ-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் புதியதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, என்.ஐ.ஏ தென் மாநிலங்களுக்கான பிரிவு டிஐஜி வந்தனா, எஸ்.பி ஸ்ரீஜித் தலைமையிலான குழுவினர் கடந்த 23-ம் தேதி இரவே கோவைக்கு வந்தனர். மேற்கண்ட கார் வெடிப்பு சம்பவம் நடந்த இடங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு விசாரித்தனர்.
இந்நிலையில் முறைப்படி, கார் வெடிப்பு வழக்கு என்.ஐ.ஏக்கு மாற்றப்பட்டுள்ளதால், என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தி விரைவாக முடிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ தென்மாநிலங்களுக்கான டிஐஜி வந்தனா ஐ.பி.எஸ் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். இவர், கடந்த 2004-ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். பயிற்சிக்கு பின்னர், ராஜஸ்தான் மாநில கேடர் இவருக்கு ஒதுக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் பயிற்சி எஸ்.பியாக தனது பணியை தொடங்கினார். அங்கு பல்வேறு இடங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
அதேபோல், சென்னை விமான நிலையத்தில் குடியுரிமைப் பிரிவில் அதிகாரியாக பணியாற்றியுள்ள வந்தனா ஐபிஎஸ் தற்போது, என்.ஐ.ஏ.வில் தென்மாநிலங்களுக்கான பிரிவில் டிஐஜியாக பணியாற்றி வருகிறார். இவர், அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள அமெரிக்கன் இன்டலிஜன்ஸ் டிரெய்னிங் அகாடமியில் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பான சிறப்புப் பயிற்சியையும் பெற்றுள்ளார். இது மிகவும் கடிமையான பயிற்சியாகும்.
இவர் விசாரித்த வழக்குகளில் மிகவும் முக்கியமானதாக கேரள மாநிலத்தில் நடந்த தங்கக்கடத்தல் வழக்கை கூறலாம். கேரள மாநிலத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநில தூதரகத்துக்கு தங்கம் கடத்தப்பட்ட வழக்கை விசாரித்த முக்கிய அதிகாரிகளில் வந்தனாவும் ஒருவர். அதுமட்டுமின்றி ஐதராபாத், பெங்களூரில் நடந்த வெடிகுண்டு வழக்குகைளை விசாரித்த அனுபவமும் இவருக்கு உள்ளது.
அதேபோல், என்.ஐ.ஏ கொச்சி கிளையில் காவல் கண்காணிப்பாளராக உள்ள ஸ்ரீஜித் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். அசாம் மாநில கேடர் ஐபிஎஸ் அதிகாரியான இவரும் அடிப்படைவாத அமைப்பு தொடர்பான வழக்குகளை சிறப்பாக கையாண்ட அனுபவம் பெற்றவர். திருபுவனம் ராமலிங்கம் படுகொலை வழக்கை இவரது தலைமையிலான குழு தான் விசாரணை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT