Published : 27 Oct 2022 11:13 PM
Last Updated : 27 Oct 2022 11:13 PM
மதுரை: பள்ளிகள் முன் வைக்கப்படும் குப்பை தொட்டிகளில் நிரம்பும் குப்பைகள் அள்ளப்படாமல் இருப்பதால் மதுரையில் பல இடங்களில் பள்ளி குழந்தைகள் தினமும் தூர்நாற்றத்தை நுகர்ந்தவாறே பள்ளிக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி ஆணையாளராக விசாகன் இருந்தபோது குப்பை தொட்டிகள் இல்லாத நகரம் உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. பொது இடங்களில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு வீடுகள் தோறும் நேரடியாக சென்று தூய்மைப்பணியாளர்கள் சேரித்தனர். சேகரித்த குப்பைகளை தரம்பிரித்து அந்த வார்டு பகுதிகளிலே உள்ள உரக்கிடங்கிற்கு கொண்டு அங்கேயே குப்பைகளை அழித்து உரமாக்கப்பட்டது. பொது இடங்கள், வைகை ஆற்றில் குப்பைகள் கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த திட்டம் ஒரளவு வெற்றிகரமாக செயல்பட்டநிலையில் பொது இடங்கள், சாலைகளில் குப்பை தொட்டிகளும், குப்பைகளும் இல்லாமல் தூய்மையாக காணும்நிலை தொடங்கியது.
இந்நிலையில் விசாகன் இடமாறுதலாகி சென்றநிலையில் மீண்டும் பொது இடங்கள், சாலைகள், முக்கிய சந்திப்பு தெருக்களில் குப்பைகள் வைக்கும் நடைமுறை மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த குப்பை தொட்டிகளை வைப்பதில் மாநகராட்சிக்கும் பொதுமக்களுக்கும் இடைய பல இடங்களில் பிரச்சனை ஏற்பட்டது. தங்கள் வீடுகள் முன், கடைகள் முன் மற்றும் முக்கிய சந்திப்புகளில் குப்பை தொட்டிகள் வைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், எதிர்ப்பு இல்லாத இடங்களில் குப்பை தொட்டிகளை மாநகராட்சி வைத்து குப்பைகளை அந்த இடங்களில் சேகரிக்கிறது.
குப்பை தொட்டிகளில் குவியும் குப்பைகளை தூய்மைப்பணியாளர்கள் அதிகாலையில் அப்புறப்படுத்த வேண்டும். ஆனால், அவர்கள் காலை 8 மணிக்கு மேலே அப்புறப்படுத்துவதால் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளை தூர்நாற்றத்தின் மத்தியில் கடந்து செல்ல வேண்டிய உள்ளது. மதுரை காளவாசல் அருகே சம்பட்டிபுரத்தில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளி முன் இரண்டு குப்பை தொட்டிககள் வைக்கப்பட்டுள்ளன. இந்த குப்பை தொட்டிகளில் தினமும் குப்பைகள் நிரம்பி வழிகிறது. அதனால் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள அப்பகுதி குப்பை மேடாக காணப்படுகிறது.
இந்த குப்பைகளை பள்ளி தொடங்குவதற்கு முன் தூய்மைப்பணியாளர்கள் அப்புறப்படுத்துவதில்லை. பள்ளி நேரத்தில் 8.30 மணிக்கு அல்லது அதற்கு பிறகு தாமதமாக குப்பைகளை அப்புறப்படுத்துகின்றனர். குப்பைகளை அள்ளும் போது கடும் தூர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு குப்பைகள், ஹோட்டல்கள், டீ கடைகளில் உள்ள குப்பைகள் அந்த இரண்டு குப்பை தொட்டிகளில்தான் கொட்டப்படுகிறது. குப்பைகளை காலையில் அள்ளாதநிலையில் பள்ளி குழந்தைகள், தினமும் இந்த குப்பைகளின் தூர்நாற்றத்திற்கு மத்தியில் தினமும் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
மழை பெய்தால் வகுப்பறை வரை தூர்நாற்றம் வீசுகிறது. அப்பள்ளி பெற்றோர்கள் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும் பள்ளி முன் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளை அவர்கள் அப்புறப்படுத்தவில்லை. இதுபோல் நகர் பகுதியில் பள்ளிகள் முன், பள்ளிக்கு செல்லும் வழிப்பாதையில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளை மாநகராட்சி அப்புறப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT