Published : 27 Oct 2022 06:36 PM
Last Updated : 27 Oct 2022 06:36 PM
கோவை: "கோவை கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பான வழக்கை என்ஐஏ அதிகாரிகள் இனி விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக காவல் துறை செய்து கொடுக்கும். இந்தச் சம்பவத்தில் காவல் துறை திரட்டி வைத்துள்ள அனைத்து ஆதாரங்களையும் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்படும்" என்று தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
கோவையில் தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "கோவை காவல் ஆணையர், உதவி ஆணையர் உள்ளிட்ட அனைத்து காவல் துறை அதிகாரிகளும் துரிதமாக செயல்பட்டதோடு, சம்பவம் நடந்த இடத்திற்கு விரைவாக சென்று, அந்த இடத்தை பாதுகாப்பாக வைத்து, உயிரிழந்த நபர் யார் என்பதை அந்த கார் மூலம் கண்டுபிடித்தனர்.
அதன்பின்னர், இந்த வழக்கில் 6 குற்றவாளிகளை மிக துரிதமாக கைது செய்து, அனைத்து ஆதாரங்களையும் திரட்டி, டிஜிபி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதற்குள்ளாகவே 5 பேரை, போலீஸ் காவலில் எடுத்து இன்றைக்கு இரண்டாவது நாளாக விசாரித்து வருகின்றனர். இதன்மூலம் நிறைய ஆவணங்கள் காவல்துறைக்கு கிடைத்துள்ளது.
அதன்பிறகு 6-வது நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குறுகிய காலத்தில் இதுபோன்ற வழக்கில் துப்பு துலக்கிய கோவை காவல் துறை ஆணையர் மற்றும் காவல்துறையினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து, வெகுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழக முதல்வர் இந்த வழக்கை என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார். இன்று உள்துறை செயலகம், இந்த வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், இங்கு வந்துள்ள என்ஐஏ அதிகாரிகளுடன் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.
என்ஐஏ அதிகாரிகள் இனி இந்த வழக்கை விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக காவல் துறை செய்து கொடுக்கும். இந்த சம்பவத்தில் காவல் துறை திரட்டி வைத்துள்ள அனைத்து ஆதாரங்களையும் என்ஐஏவிடம் ஒப்படைக்கும்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT