Published : 27 Oct 2022 04:08 PM
Last Updated : 27 Oct 2022 04:08 PM
சென்னை: "வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 29-ம் தேதியையொட்டி தென் இந்தியப் பகுதிகளில் தொடங்க சாதகமான சூழல் நிலவுகிறது. இதனால் வரும் நவ.4-ம் தேதி வரை தொடர்ந்து மழைக்கான வாய்ப்பு உள்ளது" என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தென்மேற்கு பருவமழை அக். 23-ம் தேதி விலகியது. வங்கடலில் 'சிட்ரங்' (Sitrang) புயல் உருவாகி வங்கதேசத்தில் கரையை கடந்தது. இதன் காரணமாக வடகிழக்குப் பருவமழை தொடங்க தாமதம் ஏற்பட்டது. வடகிழக்குப் பருவமழை அக்.29-ம் தேதியையொட்டி தென் இந்திய பகுதிகளில் தொடங்க சாதகமான சூழல் நிலவுகிறது.
கடந்த 1988-ல் அக்டோபர் 12-ம் தேதி தென்மேற்கு பருவமழை விலகி நவம்பர் 20-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழை காலதாமதமாக தொடங்குவது மழையின் தன்மையை பாதிக்காது. அக்டோபர் மாதத்தில் இதுவரை 9% மழை கூடுதலாக பெய்துள்ளது. தென்மேற்கு பருவ மழை 47 செ.மீ பெய்துள்ளது. இது இயல்பை விட 45 சதவீதம் அதிகம்.
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பையொட்டி இருக்கும். இந்தியப் பெருங்கடலின் இருமுனை துருவங்கள் நெகட்டிவ் என்ற அளவில் உள்ளதால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை. பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை 'லாநினோ' என்ற நிலையில் உள்ளது. இதுமட்டுமின்றி பல்வேறு காரணிகள் மூலம் மழைக்கான வாய்ப்பு உள்ளதால் தற்போது மழையின் வாய்ப்பை உறுதியாக கணிக்க முடியாது.
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. படிப்படியாக வரும் காலங்களில் மழை அதிகரிக்க கூடும். நவ.4-ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
வடகிழக்குப் பருவமழை தாமதமாக தொடங்குவதால் தாமதமாக வெளியேறும் என்றில்லை. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தாலுகா அளவில் வானிலை முன்னறிவிப்புகள் வழங்குவதற்கு சோதனை முறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்குப் பருவமழையின் முதல் பகுதி தொடர் மழை ( 1st rain Spell ) வரும் நவ.4-ம் தேதி வரை பெய்யக்கூடும் அதன் பிறகு மழை குறைந்து மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT