Published : 27 Oct 2022 04:48 AM
Last Updated : 27 Oct 2022 04:48 AM
சென்னை/கோவை: கோவையில் கார் சிலிண்டர் வெடித்த வழக்கு தொடர்பான விசாரணையை, தேசியப் புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்ற மத்திய அரசுக்குப் பரிந்துரைப்பது என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகில், கடந்த 23-ம் தேதி அதிகாலை ஒரு காரில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில், காரை ஓட்டிவந்த ஜமேஷா முபின்(25) உயிரிழந்தார். தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் உயரதிகாரிகள் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர்.
உருக்குலைந்த காருடன் பால்ரஸ் குண்டுகள், ஆணிகள் கிடைத்ததால், முபின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதில், வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் ரசாயனங்கள், வயர்கள் உள்ளிட் டவை பறிமுதல் செய்யப்பட்டன.
உபா சட்டத்தில் வழக்கு: இதுகுறித்து விசாரிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி, உக்கடத்தைச் சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (27) முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோரைக் கைது செய்தனர். அவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் (உபா) வழக்கு பதிவு செய்யப்பட்டது.
2019-ல் ஈஸ்டர் பண்டிகையின்போது, இலங்கையில் உள்ள தேவாலயங்களில் குண்டு வெடித்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு, கேரளாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகமது அசாருதீனுடன், தற்போது உயிரிழந்த முபினுக்கு தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், என்ஐஏ அதிகாரிகள் 2019-ம் ஆண்டிலேயே முபின் வீட்டில் ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோவையில் கார் சிலிண்டர் வெடித்ததன் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவையில் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரிக்கப்படுவதாகவும், தேவைப்பட்டால் வீடுகளில் சோதனை நடத்தப்படும் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தலைமைச் செயலர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை உக்கடம் பகுதியில் கடந்த அக். 23-ம் தேதி நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை மற்றும் பொதுவான சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில், கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக நடத்தப்படும் விசாரணை, கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப் பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த வழக்கில் மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டுத் தொடர்பு களும் இருக்க வாய்ப்புள்ளதால், வழக்கின் விசாரணையை தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்ற மத்திய அரசுக்குப் பரிந்துரைப்பது என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
தனி சிறப்புப் படை: மேலும், கோவை மாநகரின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த, கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளை யத்தில் புதிதாக 3 காவல் நிலையங்களை உடனடியாக அமைக்க வேண்டும்.
வருங்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க, காவல் துறையில் தனி சிறப்பு படையை உருவாக்க வேண்டும்.
தமிழகத்தின் முக்கிய நகரங்கள், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், கூடுதலாக நவீன கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த வேண்டும். உளவுப் பிரிவில் கூடுதல் அலுவலர்களை நியமிக்க வேண்டும்.
சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர், அவர்களுடன் தொடர்பு வைத்திருப்போர் குறித்த தகவல்களை அளிப்போருக்கு தக்க பாதுகாப்பு வழங்குவதுடன், அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், தலைமைச் செயலர் இறையன்பு, உள்துறைச் செயலர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ஐஏ அதிகாரிகள் களமிறங்கினர்
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) டிஐஜி வந்தனா, எஸ்.பி. ஸ்ரீஜித் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் இரவு கோவை வந்தனர். கோட்டைமேட்டில் கார் சிலிண்டர் வெடித்த பகுதியை ஆய்வு செய்த என்ஐஏ குழுவினர், மாநகர காவல் துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது, கைது செய்யப்பட்டவர்களின் பின்னணி உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து, என்ஐஏ குழுவினர் கோவையில் முகாமிட்டு, வழக்கு தொடர்பான தகவல்களைத் திரட்டி வருகின்றனர். எனினும், இவ்வழக்கு அதிகாரப்பூர்வமாக என்ஐஏ-க்கு மாற்றம் செய்யப்படாததால், வழக்கு விசாரணை கோவை மாநகர காவல் துறை வசமே உள்ளது.
முறையாக அரசாணை வெளியிடப்பட்ட பின்னர், என்ஐஏ அதிகாரிகள் புதிதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்துவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT