Published : 27 Oct 2022 07:25 AM
Last Updated : 27 Oct 2022 07:25 AM
சென்னை: வாடகைத் தாய் விவகாரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் விதிகளை மீறவில்லை என்று சுகாதாரத் துறையின் விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் கடந்த 9-ம் தேதி ட்விட்டரில் பதிவிட்டார். இவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதாக தகவல் வெளியானது.
சட்டப்படி, திருமணமாகி 5 ஆண்டுகள் வரை குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மற்றும் தம்பதியரில் ஒருவருக்கு குழந்தைப்பேறுக்கு தகுதியான உடல்நிலை இல்லாத பட்சத்தில், உரிய விதிகளை பின்பற்றி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் 4 மாதங்களிலேயே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதாக சர்ச்சை எழுந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின்படி, இதுகுறித்து விசாரிக்க மருத்துவம், ஊரக நலப்பணிகள் இயக்கக (டிஎம்எஸ்) இயக்குநர் தலைமையில் கடந்த 13-ம் தேதி குழு அமைக்கப்பட்டது. இக்குழு 2 வாரங்கள் விசாரணை நடத்தி, இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் நேற்று சமர்ப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் கடந்த 2016 மார்ச் 11-ம்தேதி பதிவுத் திருமணம் செய்துள்ளனர். அதற்கான பதிவு சான்றிதழ்மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. அது உண்மையானதுதான் என பதிவுத் துறை உறுதிசெய்துள்ளது.
அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐசிஎம்ஆர்) வழிகாட்டு நெறிமுறைகளின்படி தம்பதியர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்த மருத்துவச் சான்று விசாரணை குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகத்தினர், சிகிச்சை அளித்த மருத்துவர், வாடகைத் தாய்க்கு பேறுகால சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் நேரடி விசாரணை நடத்தப்பட்டது. தம்பதிக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை விசாரித்தபோது, 2020-ல் அவர்களது குடும்ப மருத்துவர் வழங்கிய பரிந்துரை கடிதம்அடிப்படையில் சிகிச்சை அளித்ததாக குறிப்பிட்டார். குடும்ப மருத்துவர் வெளிநாடு சென்றுவிட்டதால், விசாரணை நடத்தவில்லை.
ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வாடகைத் தாய்க்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அவரது வயது, தம்பதியரின் வயது, செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் ஆகியவையும் வாடகைத் தாய் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படியே உள்ளன. 2020 ஆகஸ்டில் சினைமுட்டை,விந்தணு பெறப்பட்டு, கருமுட்டைகள் உருவாக்கப்பட்டு, உறைநிலையில் மருத்துவமனையில் சேமித்துவைக்கப்பட்டுள்ளது. 2021 நவம்பரில் வாடகைத் தாய் ஒப்பந்தம் போடப்பட்டது. 2022 மார்ச்சில் வாடகைத் தாயின் கருப்பையில் கருமுட்டைகள் செலுத்தப்பட்டு, அக்டோபரில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறந்துள்ளன. அக்.9-ம் தேதி தம்பதியரிடம் குழந்தைகள் வழங்கப்பட்டன. செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, வாடகைத் தாய் உறவினராக இருக்கவேண்டும். ஆனால், இதற்கு முந்தைய ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படி, உறவினர் அல்லாதோர் வாடகைத் தாயாக இருப்பதற்கும், அவசிய செலவுக்கு பணம் வழங்கும் வழிமுறையும் இருந்தது. அதனால், எந்த விதிமீறலும் நடக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு நோட்டீஸ்: ஐசிஎம்ஆர் வழிகாட்டு முறைகளின்படி, மருத்துவமனையில் தம்பதிக்கு அளித்த சிகிச்சை விவரங்கள், வாடகைத் தாய்உடல்நிலை குறித்த ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். மருத்துவமனையில் இவை முறையாக பராமரிக்கப்படாததால், மருத்துவமனையின் செயற்கை கருத்தரித்தல் மையத்தை ஏன் தற்காலிகமாக மூடக்கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT