Published : 27 Oct 2022 07:35 AM
Last Updated : 27 Oct 2022 07:35 AM
சென்னை: குஜராத்தில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான கண்காட்சியில், தமிழகத்தில் விமானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தொழில் துறையில் முதலீட்டுக்கான 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் (டிட்கோ) வெளியிட்ட செய்திக்குறிப்பு: குஜராத் மாநிலம் காந்தி நகரில், மத்திய பாதுகாப்புத் துறை சார்பில், ‘பாதுகாப்புக் கண்காட்சி’ கடந்த அக்.18 முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. சர்வதேச அளவிலான இந்த கண்காட்சியில், மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்ளூரில் பாதுகாப்புத் துறைக்காக தயாரிக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், இந்த கண்காட்சி இந்தியா - ஆப்ரிக்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பானதாக இருந்ததால், 53 ஆப்ரிக்க நாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
இதன் ஒருபகுதியாக டிட்கோவால் உருவாக்கப்பட்ட நிறுவனமான தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் பெருவழித்தடம் (டிஎன்டிக்) நிறுவனமும் இதில் பங்கேற்றது. குறிப்பாக தமிழகத்தில் இருந்து 20 விமானம் தொடர்பான மற்றும் பாதுகாப்பு தொழில் நிறுவனங்கள் இதில் பங்கேற்று தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தின. பாதுகாப்பு தொழில்துறையில் சுயசார்பு என்ற இலக்கை அடைய, மாநிலத்துக்கு இந்த முயற்சிகள் உதவிகரமாக இருந்தன. இதுதவிர டிட்கோ சார்பில், விமான போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் துறையில் தொழில் முதலீட்டுக்கான கருத்தரங்கை டிஎன்டிக் வாயிலாக நடத்தியது. இதில், டிட்கோ மேலாண் இயக்குநர் ஜெயஸ்ரீமுரளிதரன், பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆபத்துகாத்த சிவதாணுபிள்ளை, இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, டிட்கோ திட்ட இயக்குநர் பி.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், தமிழகத்தில் நிலவும் முதலீட்டுக்கு உகந்த சூழல் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
தொடர்ந்து, டிட்கோ சார்பில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம், மிதானி, எவிஎன்எல், முனிஷன்ஸ் இந்தியா, டிசிஎல், போர்ஜ் பார்வேடு உள்ளிட்ட 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பாதுகாப்புக் கண்காட்சியில் பங்கேற்றதன் மூலம் உள்ளூர் மற்றும் உலகளாவிய விமானம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களின் முதலீடு இந்தியாவுக்கு கிடைக்கும். இதன்மூலம், வரும் 2030-ம் ஆண்டில் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை எட்ட முடியும் என்று நம்பப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT