Published : 26 Jul 2014 10:32 AM
Last Updated : 26 Jul 2014 10:32 AM

காவலர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

வங்கி ஊழியரைக் கடத்தி ஏடிஎம் கார்டை பறித்து ரூ. 50 ஆயிரம் கொள்ளையடித்த ஆயுதப்படை காவலர்கள் 3 பேர் மீதான வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மஞ்சள்நீர் காயலைச் சேர்ந்தவர் எம். ஜெயகுமரேஷ். நாமக்கலில் மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிகிறார். கடந்த ஜூன் 28-ம் தேதி இரவில், மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் தூத்துக்குடி செல்வதற்காக நின்றிருந்தார். அப்போது அவரை கடத்தி சென்ற மதுரை ஆயுதப்படை காவலர்கள் செந்தில்குமார் (22), செந்தில் (23), பிரவீன் (23) ஆகிய மூவரும், ஏடிஎம் கார்டை பறித்து ரூ. 50 ஆயிரத்தை எடுத்தனர்.

இது தொடர்பாக ஜெயகுமரேஷ் அளித்த புகாரின் பேரில், அண்ணாநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி ஜெயகுமரேஷ், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி என். கிருபாகரன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வழக்கறிஞர் சிவதிலகர், ஏடிஎம் கார்டை பயன்படுத்தி காவலர்கள் மூவரும் பணம் எடுத்த புகைப்படங்களை நீதிபதியிடம் வழங்கினார். மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் ஜாமீனில் வெளிவந்து விட்டதாகவும் கூறினர்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் காவலர்கள் மீது கடும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. வேலியே பயிரை மேய்ந்த கதை நடந்துள்ளது. போலீஸார் சமூகத்தின் காவலர்கள். அவர்கள் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். மனுதாரர் முழுச் சம்பவத்தையும் குறிப்பிட்டு புகார் அளித்துள்ளார். போலீஸார் 24 மணி நேரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், 9 நாள்கள் தாமதமாக வழக்கு பதிவு செய்துள்ளனர். புகார்தாரருக்கு முதல் தகவல் அறிக்கை நகலை இலவசமாக வழங்க வேண்டும் என ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மனுதாரருக்கு முதல் தகவல் அறிக்கை நகல் வழங்கவில்லை. மேலும் உரிய பிரிவுகளின் கீழ், இந்த வழக்கை பதிவு செய்யவில்லை.

காவலர்கள் மூவரையும் ஊடகங்களின் பார்வையிலிருந்து மறைப்பதில் போலீஸார் குறியாக இருந்துள்ளனர். இவர்களுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படுகிறது. சிபிசிஐடி போலீஸார் முதல் தகவல் அறிக்கையில் மாற்றம் செய்து விசாரணையை விரைவில் முடித்து, நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x