Published : 26 Oct 2022 06:14 PM
Last Updated : 26 Oct 2022 06:14 PM
திருப்பூர்: பல்லடம் அருகே விதியை மீறி இயங்கிய கல்குவாரி குத்தகைதாரருக்கு ரூ.10 கோடியே 40 லட்சம் அபராதம் விதித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கோடாங்கிபாளையத்தில் ராமகிருஷ்ணன் என்பவருக்கு சாதாரண கற்கள் மற்றும் கிராவல் வெட்டி எடுப்பதற்கு குத்தகை உரிமம் வழங்கப்பட்டது. இந்நிலையில், அங்கு சட்டவிரோதமாகவும், விதிகளை மீறியும் கிராவல் வெட்டி எடுப்பதாக, விஜயகுமார் என்பவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு. வினீத்தால் நியமிக்கப்பட்ட வட்ட அளவிலான கண்காணிப்பு குழு மற்றும் சென்னை புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரால் நியமிக்கப்பட்ட சிறப்புக்குழு அந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது. அதன் அடிப்படையில் ராமகிருஷ்ணன் என்பவருக்கு வழங்கப்பட்ட கல்குவாரி உரிமமானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த ஆணையை எதிர்த்து ராமகிருஷ்ணன், சென்னை புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரிடம் மேல்முறையீட்டு மனு அளித்தார். இதன் அடிப்படையில் நடந்த விசாரணையின்படி குத்தகைதாரருக்கு ரூ.10 கோடியே 40 லட்சத்து 48 ஆயிரத்து 207 அபராதம் விதிக்கப்பட்டது. குத்தகைதாரர் ராமகிருஷ்ணன் தவணை முறையில் அபராதம் செலுத்த கோரியதன் அடிப்படையில், மாதந்தோறும் ரூ.30 லட்சம் தவணை முறையில் அரசுக்கு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கனிம விதிகளுக்கு உட்பட்டு குவாரிப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குத்தகைதாரர் அபராதத்தை செலுத்தி வரும் நிலையில், சென்னை புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் ஆணைக்கு இணங்க, குவாரி விதிகளுக்கு உட்பட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மட்டும் கனிமம் வெட்டி எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது அந்த குவாரி இயங்கி வருகிறது’ என்று அதில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT