Published : 26 Oct 2022 02:58 PM
Last Updated : 26 Oct 2022 02:58 PM
மதுரை: மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் ஜெயந்தி, குருபூஜையை யொட்டி காளையார்கோயில், பசும்பொன் கிராமத்துக்கு செல்லும் கார் உள்ளிட்ட வாகனங்கள் மதுரை மாவட்டத்திற்குள் விதியை மீறினால் பறிமுதல் செய்யப்படும். ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை எஸ்பி சிவபிரசாத் எச்சரித்துள்ளார்.
இது தொடரபாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''செப்., 11ல் பரமக்குடியில் நடந்த தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி மதுரை மாவட்டத்திற்குள் காவல்துறை, அரசின் விதியை மீறியது தொடர்பாக மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 31 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து 25 நான்கு சக்கர வாகனங்கள், 6 பைக் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே நாளை (அக்., 27) மருதுபாண்டியர் நினைவு தினத்தையொட்டி, சிவகங்கை மாவட்டம், காளையார் கோயிலுக்கும், தேவர் ஜெயந்தி, குருபூஜையையொட்டி அக்.,29, 30 ஆம் தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னுக்கும் சொந்த கார்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். மதுரை மாவட்டத்திற்குள் காவல்துறை, அரசின் விதியை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்வோம். சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்வது குறித்து சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரைக்கப்படும்.
மேலும், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் வழக்கு பதிவு செய்யப்படும். போகும் வழியிலுள்ள மதுக்கடைகள் மூடப்படும். சோதனை சாவடிகளில் வாகனங்கள் பரிசோதிக்கப்படும். தவறு புரிந்தோரை கைது செய்யப்படுவார்கள். பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் உடனே விடுவிக்கப்படமாட்டாது. நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்துப்படும். இதன்மூலம் பண விரயம், நீதிமன்றங்களுக்கு அலைய வேண்டிய சூழல் உருவாகும். வீதிமீறலை கண்டறிய மதுரை மாவட்ட எல்லைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்கப்படும்.
காவல்துறையினர் மூலம் வீடியோ எடுக்கப்படும். அரசு, காவல்துறையினர் வாகனங்களில் ஏறி நின்று ரகளை செய்வோர் கைது செய்யப்படுவர். இது போன்ற நிகழ்வை சமூக வலைத்தளங்களில் பரப்பினாலும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு தலா 2 கண்காணிப்பு வாகனங்கள் வழங்கப்பட்டு, அக்காவல் நிலைய எல்லைகளில் கண்காணிக்கப்படும். மாவட்டம் முழுவதும் பட்டாலியன், உள்ளூர் போலீஸார் உட்பட சுமார் 2 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துகிறோம். அனுமதி பெற்ற வாகனங்கள் எவ்வித வீதிமீறலும் இன்றி முறையாக சென்றுவர அறிவுறுத்தப்படுகிறது. காவல்துறையினருக்கு ஒத்துழைக்கவேண்டும்.'' இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT