Published : 26 Oct 2022 02:12 PM
Last Updated : 26 Oct 2022 02:12 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து பெயருக்காக மட்டுமே அதிகாரிகள் ஆய்வு செய்வதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக, அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரியில் என்ஆர் காங் - பாஜக கூட்டணி அரசு ஆட்சி அமைத்துள்ளது. இச்சூழலில் புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், அரசு அதிகாரிகள் மீது நேரடியாக குற்றம்சாட்டி இன்று வெளியிட்ட அறிக்கையில், "புதுச்சேரி மாநிலத்தில் அரசு பிளாஸ்டிக் பைகளை தடை செய்து ஆணை வெளியிட்டுள்ளது. ஆனால், இதை செயல்படுத்த அரசு அதிகாரிகள் முயற்சிகள் எதுவும் செய்யவில்லை. புதுச்சேரியில் நகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் அதிகரித்துள்ளது. அதற்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை என நகராட்சி தரப்பும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை என நகராட்சி தரப்பும் மாறி மாறி கூறி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் பிற மாநிலங்களுக்கு மறைமுகமாக பிளாஸ்டிக் பை ஏற்றுமதி செய்யக்கூடிய இடமாக மாறி வருகிறது. இதற்கு புதுச்சேரி அரசு அதிகாரிகளும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனம், விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுக்க அதிகளவில் நடவடிக்கைகளை பல மாநிலங்கள் எடுத்து, சில மாநிலங்களில் முற்றிலும் பிளாஸ்டிக் பைகள் உபயோகிக்காதவையாக மாறி விட்டன. ஆனால், புதுச்சேரயில் அதிகாரிகள் பெயருக்காக ஆய்வு செய்து வருகின்றனர். அரசு அதிகாரிகளின் இந்த அலட்சியத்தால் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு புதுச்சேரியில் அதிகரித்து வருகிறது. வரும் காலம் மழைக்காலம் என்பதால் மக்கள் பயன்படுத்தும் அனைத்து பிளாஸ்டிக் பைகளும் கழிவு நீர் வெளியேறும் வாய்க்கால்களில் அடைத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
கடந்த மழை காலங்களில் மழை நீர் செல்ல முடியாமல் வாய்கால்கள் அனைத்திலும் தடை செய்ய்பட்ட பிளாஸ்டிக் பைகள் அடைத்து இருந்தது. இதனால் மழைநீர் வெளியேறாமல் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். புதுச்சேரியில் வரும் காலங்களில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகமாக இருக்குமானால் அதற்கு முழு காரணம் அதன் துறை சார்ந்த அரசு அதிகாரிகள்தான். பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்காமல் அலட்சியப்படுத்தும் அதிகாரிகள் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சாமிநாதன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT