Published : 26 Oct 2022 02:04 PM
Last Updated : 26 Oct 2022 02:04 PM

பக்ரைனில் காணாமல்போன இரு மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

சீமான் | கோப்புப்படம்

சென்னை: "தமிழ்நாடு அரசு, இந்திய ஒன்றிய அரசினை வலியுறுத்தி பக்ரைன் நாட்டுடன் பேசி காணாமல் போன இரு குமரி மீனவர்களையும் விரைந்து மீட்டு அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "கன்னியாகுமரி மாவட்டம், கடியப்பட்டணம் மீனவக் கிராமத்தைச் சார்ந்த கடலோடிகளான சகாய செல்சோ மற்றும் ஆண்டனி வின்சென்ட் ஆகிய இருவரும் வறுமை காரணமாக வளைகுடா நாடான பக்ரைனில் மீன்பிடி பணிக்கு சென்ற நிலையில், கடந்த 17 ஆம் தேதி நடுக்கடலில் அவர்கள் காணாமல் போனச் செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். காணாமல் போய் ஒரு வாரத்திற்கு மேலாகியும் மீனவர்கள் இருவரும் மீட்கப்படாதது அவர்களது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்களைத் தேடி மீட்பதில் பக்ரைன் அரசு தீவிர முயற்சி மேற்கொள்ளவில்லையோ என அவர்களது குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை அவர்கள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

எனவே, தமிழ்நாடு அரசு, இந்திய ஒன்றிய அரசினை வலியுறுத்தி பக்ரைன் நாட்டுடன் பேசி காணாமல் போன இரு குமரி மீனவர்களையும் விரைந்து மீட்டு அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மேலும், அனைத்து வளைகுடா நாடுகளிலும் உள்ள இந்தியத் தூதரகங்களைத் தொடர்புகொண்டு தமிழக மீனவர்களை மீட்பதற்கு தேவையான உதவிகளைப் பெற்றிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக இந்திய ஒன்றிய அரசினை வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x