Published : 26 Oct 2022 01:38 PM
Last Updated : 26 Oct 2022 01:38 PM

கோவை சம்பவம்: பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

கோவை சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிளுடன் ஆலோசனை

சென்னை: கோவை கார் வெடிப்புச் சம்பவம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

தலைமைச் செயலகத்தில், இன்று தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர், காவல்துறை டிஜிபி, உளவுத்துறை ஏடிஜிபி ஆகியோர் தலைமையில் கோவை சம்பவம் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகம் வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

கோவை சம்பவம் தொடர்பான விசாரணை நிலவரம், கைது நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். மேலும், கோவை சம்பவத்தின் எதிரொலியாக தமிழக அளவில் எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு அதிகரிக்க வேண்டிய பகுதிகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கோவை உக்கடம் பகுதியில் நடந்த கார் வெடிப்புச் சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவரும் சூழலில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

முன்னதாக, கோவை உக்கடம் அருகேயுள்ள கோட்டைமேடு வழியாக டவுன்ஹால் பேருந்து நிறுத்தம் நோக்கி கடந்த 23-ம் தேதி அதிகாலை 4.10 மணியளவில் சென்ற மாருதி கார், சங்கமேஸ்வரர் கோயில் முன்புள்ள வேகத்தடையை கடந்த போது திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் கார் இரண்டு துண்டுகளாக உடைந்து உருக்குலைந்தது. விபத்தில் காரை ஓட்டி வந்த உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த ஜமேஷா முபின்(25) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார் விசாரித்தனர். 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீஸாரின் விசாரணையில், இவ்வழக்கு தொடர்பாக உக்கடத்தைச் சேர்ந்த முகமது தல்கா(25), முகமது அசாருதீன்(23), ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26) ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது உபா எனப்படும் சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டம், கூட்டுசதி, இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக தகவல்களை சேகரிப்பதற்காக என்.ஐ.ஏ டிஐஜி வந்தனா, எஸ்.பி ஸ்ரீஜித் தலைமையிலான என்.ஐ.ஏ குழுவினர் கோவைக்கு வந்தனர். இவர்கள், கோவையில் மாநகர காவல்துறையினர் உயரதிகாரிகளை சந்தித்து மேற்கண்ட சம்பவம் தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர். தொடர்ந்து கார் விபத்து நடந்த இடம் உள்ளிட்டவற்றுக்குச் சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்துகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x