Published : 26 Oct 2022 04:59 AM
Last Updated : 26 Oct 2022 04:59 AM

பல மின்இணைப்புகள் உள்ள வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்க மேலும் அவகாசம் - அடுத்த ஆண்டு ஏப்.10 வரை நீட்டிப்பு

சென்னை: ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்பு வைத்துள்ள வீடுகளை ஆய்வு செய்து நோட்டீஸ் வழங்குவதற்கான கால அவகாசத்தை வரும் 2023, ஏப்ரல் மாதம் வரை நீட்டித்து மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வீடுகள், கடைகள், வர்த்தகநிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கான மின்கட்டணத்தை உயர்த்த மின்வாரியத்துக்கு, மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது. இதையடுத்து, கடந்த செப்.10 முதல் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

மேலும், ஒரு வீட்டுக்கு ஒருஇணைப்புக்கு மேல் மின்இணைப்பு வைத்திருந்தால், ஒரு இணைப்புக்கு மட்டும்தான் அரசின் 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் மானியம் வழங்கப்படும். மற்ற இணைப்புகளுக்கு இவை ரத்து செய்யப்படுவதுடன் அந்த மின்இணைப்புக்கான கட்டணமும் பொது பயன்பாட்டுக்கான கட்ட ணமாக மாற்றப்படும்.

இதுதொடர்பாக, 2 வாரத்துக்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்பு வைத்துள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்குமாறு மின்வாரியத்துக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இதுதொடர்பாக மின்வாரியத்துக்கு சில சந்தேகங்கள் எழுந்தன. குறிப்பாக, வாடகை மற்றும் குத்தகைக்கு விடப்பட்டுள்ள வீடுகளுக்கு அதற்கான ஒப்பந்த ஆவணங்களை வாங்க வேண்டுமா, அதேபோல், கூட்டுக் குடும்பமாக வசிப்பவர்கள் தனித்தனி குடும்ப அட்டை வைத்திருந்தால் அந்தக் குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்புகள் இருந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் தரப்பில் விளக்கம் கோரப்பட்டது.

மின் வாரியம் கோரிக்கை

மேலும், வடகிழக்குப் பருவ மழை காரணமாக மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள், பண்டிகை காலம் ஆகியவற்றால் 2 வாரத்துக்குள் வீடு வீடாகச் சென்று நோட்டீஸ் வழங்க போதியநேரம் இல்லாததால், நோட்டீஸ் வழங்க காலஅவகாசம் வழங்கவேண்டும் எனவும் மின்வாரிய தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இக்கோரிக்கையை ஏற்று நோட்டீஸ் வழங்குவதற்கான காலஅவகாசம் அடுத்த ஆண்டு ஏப்.10-ம் தேதி வரை நீட்டித்து மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x