Published : 26 Oct 2022 05:04 AM
Last Updated : 26 Oct 2022 05:04 AM
சென்னை: பகுதி சூரிய கிரகணம் நேற்று நிகழ்ந் தது. இதைக் காண அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் மூலம் பொதுமக்கள், குழந்தைகள் ஆகியோர் கிரகணத்தை ஆர்வமாக கண்டு ரசித்தனர்.
சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும். அதன்படி சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
பிர்லா கோளரங்கம்
அந்த வகையில் நேற்று பகுதி சூரியகிரகணம் நிகழ்ந்தது. இதைக் காண தமிழகம்முழுவதும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தன. சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் குழந்தைகள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் சூரிய கிரகணத்தை கண்டு ரசித்தனர். மேலும் நேற்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் குடும்பத்துடன் கடற்கரை போன்றஇடங்களிலும் பல்வேறு அறிவியல் அமைப்புகள் மூலம் வழங்கப்பட்ட கண்ணாடிகளால் பொதுமக்கள் கிரகணத்தை கண்டனர். அதேநேரம் முக்கிய கோயில்களின் நடை சாத்தப்பட்டிருந்தன.
பகுதி சூரிய கிரகணம் குறித்து தமிழ்நாடு பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் எஸ்.சவுந்தரராஜ பெருமாள் கூறியதாவது:
தமிழகத்தை பொருத்தவரை சென்னை யில் மாலை சூரியன் மறையும்போது 5.14முதல் 5.44 மணி வரை கிரகணம் தென்பட்டது.அப்போது அதிகபட்சமாக 8 சதவீதம் சூரியன்மறைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக 7 டிகிரி உயரத்தில் கிரகணம் தொடங்கியது. இதுகுறைந்த தூரம் என்பதால் பார்ப்பது மிகவும்கடினம். அந்த பகுதியில் மேகமும் மறைத்திருந்தது. எனவே 10 நிமிடம் மட்டுமே மிகவும் தெளிவாக தெரிந்தது. இதேபோல் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நடக்கும் கிரகணத்தை பிர்லா கோளரங்கத்தில் திரை வைத்து மக்களுக்கு காண்பித்தோம். கிரகணத்தில் அறிவியல் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தோம்.
மேற்கு தமிழகத்தில் சற்று அதிகமாக கிரகணம் தென்பட்டது. தெற்கில் கன்னியாகுமரியில் மிகக் குறைந்த அளவாக 2 சதவீதம்மட்டும் கிரகணம் தென்பட்டது. நாட்டின் மற்றபகுதியைப் பொருத்தவரை புதுடெல்லியில் 44 சதவீதம், குஜராத் காந்தி நகரில் 33 சதவீதம், மும்பையில் 20 சதவீதத்துக்கும் மேல், ஜம்முவில் 51 சதவீதம், கார்கில்லில் 55 சதவீதம் கிரகணம் தென்பட்டது. வட இந்தியாவில் சற்று அதிகமாக கிரகணம் தென்பட்டது. வரும் நவம்பர் 8-ம் தேதி முழுசந்திர கிரகணம் நிகழ உள்ளது. இது தமிழகத்தில் பகுதி சந்திர கிரகணமாக சில நிமிடங்களே தென்படும். தமிழகத்தில் மீண்டும் பகுதி சூரிய கிரகணம் 2027-ம் ஆண்டு ஆக.2-ம் தேதி நிகழும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT