Published : 26 Oct 2022 06:38 AM
Last Updated : 26 Oct 2022 06:38 AM

கோவை சிலிண்டர் வெடிப்பு | திமுக ஆட்சியில் பயங்கரவாத சம்பவங்கள்: இபிஎஸ், ஓபிஎஸ் கருத்து

சென்னை: காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திமுக ஆட்சியில் பயங்கரவாத சம்பவங்கள் நடப்பதாக தனித்தனியாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை: கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில் அருகே கடந்த அக்.23-ம் தேதி அதிகாலை 4.10 மணிக்கு ஒரு காரில் எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவம் விபத்தா, தற்செயலா, சதிவேலையா என்ற கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. உயிரிழந்தவர் பெயர் ஜமேஷா முபின். 2 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய பாதுகாப்பு படையினரால் விசாரிக்கப்பட்டவர். அவரது வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் மருந்து பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று டிஜிபி தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டு வைத்த காரை இயக்கி, மக்கள் நெரிசல் மிகுந்த இடத்தில் வெடிக்க வைத்து, பல உயிர்களை பலிவாங்க சதி நடந்துள்ளதாக கருதப்படுகிறது. இறந்த முபின், எந்த பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை என்று டிஜிபி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியின்போது அமைதியாக காட்சியளித்த தமிழகத்தில், தற்போது திமுக ஆட்சியில் குண்டுவெடிப்பு தொடர்கதை ஆகியுள்ளது. காவல் துறையை தங்கள் பொய்யான பழிவாங்கும் நடவடிக்கைக்காக திமுக அரசு பயன்படுத்துவதே உளவுத் துறை, காவல் துறையின் வீழ்ச்சிக்கு காரணம். எனவே, கார் குண்டுவெடிப்பு என்பது தற்செயலாக எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தா, ஏதேனும் சதிவேலையா அப்படியானால், அதன் பின்னணியில் சமூக விரோதிகள் உள்ளனரா என்று காவல் துறையினர் எவ்வித அரசியல் அழுத்தமும் இன்றி, சுதந்திரமாக தீவிர விசாரணை நடத்தி, உண்மை குற்றவாளிகள், அதன் பின்னணியில் உள்ளவர்களையும் கண்டுபிடிக்க வேண்டும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் கருத்து: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திமுக ஆட்சியில் பயங்கரவாதம், கொலை, கொள்ளை, வன்முறை தலைவிரித்தாடுகிறது. சட்டம் - ஒழுங்கு சரிசெய்யப்படவில்லை. கோவையில் கார் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து வருவதற்கு, இதைவிட சிறந்த எடுத்துக்காட்டு தேவை இல்லை. இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, சட்டம் - ஒழுங்கு பிரச்சினையில் உடனே தனி கவனம் செலுத்தி, வன்முறையாளர்கள், பயங்கரவாதிகளிடம் இருந்து தமிழகத்தை, தமிழக மக்களை காப்பாற்ற ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x