Published : 26 Oct 2022 07:09 AM
Last Updated : 26 Oct 2022 07:09 AM
திருப்போரூர்/காஞ்சி/திருவள்ளூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயில், காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயில், சிறுவாபுரி பாலசுப்பிரமணியன் கோயில் ஆகிய கோயில்களில் கந்த சஷ்டி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கி 6 நாட்கள் நடைபெறுகிறது. அதிகாலை 4:30 மணியளவில், கோயில் வட்ட மண்டபத்தில், உற்சவர் கந்தசுவாமி பெருமான், சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின், கொடி மரம், கொடி உள்ளிட்டவற்றுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, காலை 6:00 மணிக்கு, கோயில் சிவாச்சாரியார்களால், உற்சவ கொடி ஏற்றப்பட்டது. பின்னர், உற்சவர் கந்தசுவாமி வள்ளி, தெய்வானையுடன் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆறு நாட்கள் நடைபெறும் கந்தசஷ்டி விழாவின், பிரதான நிகழ்வாக, வரும் 30-ம் தேதி, சூரசம்ஹார விழா நடைபெறுகிறது. இதில் முருகப் பெருமான் தங்கவேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதைத் தொடர்ந்து இரவு தங்கமயில் வாகனத்தில் முருகப் பெருமான் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதனை தொடர்ந்து வரும் 31-ம் தேதி திருக்கல்யாணத்துடன் பெருவிழா நிறைவடைகிறது.\
குமரக்கோட்டம் முருகன் கோயில்: காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயில் கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இரவு விநாயகப் பெருமான் மூஷிக வாகனத்தில் வீதியுலா வந்தார். தினந்தோறும் முருகப்பெருமான் வீதியுலா வரும் நிகழ்ச்சிகள் காலை, மாலையில் நடைபெறுகின்றன. மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளன. தினந்தோறும் பல்லக்கு, கந்தசஷ்டி, கந்தப்பொடி வசந்தம், ஆடு வாகனம், மான் வாகனம், அன்னவாகனம், மயில் வாகனம், குதிரை வாகனம் போன்ற வாகனங்களில் முருகன் வீதியுலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அக்டோபர் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் காஞ்சிபுரம் மட்டும் அல்லாமல் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்பர். இதனைத் தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சி, தெய்வானை பந்தல் ஊடல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் செய்து வருகிறார்.
சிறுவாபுரி கோயில்: சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று அதிகாலை 6 மணியளவில், தங்க, வைர ஆபரணங்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பாலசுப்பிரமணிய சுவாமி, கொடி கம்பம் அருகே வீற்றிருக்க, கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கொடியேற்ற நிகழ்வில், முதல்வர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரி ஜெயந்தி, எம்.எல்.ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், பிரபாகர் ராஜா, கோயில் தக்கார் சித்ராதேவி, செயல் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வரும் 31-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கந்த சஷ்டி விழாவில், அக்டோபர் 26, 27, 28 ஆகிய நாட்களில் இரவில் சுவாமி உள்புறப்பாடும், 29-ம் தேதி மதியம் சண்முகருக்கு அபிஷேகமும், அன்று மாலை சண்முகர் வேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. வரும் 30-ம் தேதி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை சந்நிதி வீதியில் சூரசம்ஹாரமும், 31-ம் தேதி மாலை திருக்கல்யாண உற்சவமும் நிகழ உள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆறு நாட்கள் நடைபெறும் விழாவின், பிரதான நிகழ்வாக, வரும் 30-ம் தேதி, சூரசம்ஹார விழா நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT